ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்சலுகையை நீக்குவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவிடம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கு ஜி.எஸ்.பீ. பிளஸ் வரிச் சலுகையை தொடர்ந்து வழங்குவது தொடர்பாக ஆராய நாட்டுக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக் குழு நேற்று மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்தது.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்த நிலையில், இந்த சந்திப்பு குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பிரிவு, ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்சலுகையை நீக்குவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழ் மக்கள் மீதான உரிமை மீறல்கள், புதிய அரசியலமைப்பை உருவாக்கல், நில அபகரிப்பு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட்ட வேண்டும் என்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் அனைவரும் விரைவில் விடுவிக்கப்பட வேண்டுமென்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.



