தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அன்றாடல் கூலித்தொழில்செய்துவந்த குடும்பங்கள் மிகவும் கஸ்டங்களை எதிர்கொண்டுவரும் நிலையில் அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பல்வேறு உதவிகளை வழங்கிவருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் காரணமாக தொழில்வாய்ப்புகளை இழந்து பல்வேறு கஸ்டங்களை எதிர்கொண்டுவருவோருக்கு தன்னார்வ நிறுவனங்கள் ஊடாக உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன.
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண கிளையின் ஊடாக மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருப்பெருந்துறையில் உள்ள மிகவும் வறிய நிலையில் உள்ள மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் நேற்று வழங்கிவைக்கப்பட்டன.
அண்மையில் சுகவீனம் காரணமாக சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண உதவி செயலாளரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவியுமான திருமதி செல்வி மனோகரின் 30ஆம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.
சுவிஸ் உதயம் அமைப்பின் மட்டக்களப்பு இணைப்பாளர் திருமதி ரொமிலா செங்கமலன் தலைமையில் இந்த உலர்உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இதன்போது திருப்பெருந்துறையில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட மிகவும் வறிய நிலையில் உள்ள 50குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.