நாட்டுக்கு மேலும் 305,370 பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டன

#அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட மேலும் 3 இலட்சத்து 5 ஆயிரத்து 370 பைஸர் கொரோனா தடுப்பூசிகள் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
கட்டார் விமான சேவை ஊடாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று அதிகாலை குறித்த தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட குறித்த தடுப்பூசிகள், குளிரூட்டல் வசதியுடனான லொறிகளின் மூலம், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மேலும் ஒரு தொகை கொரோனா தடுப்பூசிகள் அடுத்த மாதம் இறுதிக்குள் நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, 21 இலட்சம் Pfizer கொரோனா தடுப்பூசிகள் அடுத்த மாதம் இறுதிக்குள் கிடைக்கப்பெறுமென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிறுவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் பெற்றோர் தயக்கம் காட்ட வேண்டாமென இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், சமூக நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதை விட, தனி நபர்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வதன் மூலம் கொரோனா வைரஸ் பரவலை மேலும் கட்டுப்படுத்த முடியுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை