​மட்டக்களப்பில் பரபரப்பு - கிணற்றிலிருந்து இளம் தாய் உயிருடன் மீட்பு - அதே கிணற்றில் அழுகிய நிலையில் சடலம்!

மட்டக்களப்பு, படுவான் கரைப் பகுதியிலுள்ள கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை - நெல்லிக்காடு வயல்வெளிப் பகுதியில், கிணறு ஒன்றிலிருந்து இளம் தாய் ஒருவர் இன்று (20.03.2026) காலை உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அதே கிணற்றுக்குள் அழுகிய நிலையில் மற்றுமொரு சடலம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கொத்தியாபுலையைச் சேர்ந்த 27 வயதான குகநாதன் ரணுஸ்கா எனும் இளம் தாய், நேற்று (19.03.2026) மட்டக்களப்பு நகருக்கு நகை அடகு எடுப்பதற்காகத் தனது குழந்தையுடன் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார். இது தொடர்பாக உறவினர்கள் தேடி வந்த நிலையில், இன்று காலை தாந்தாமலை நெல்லிக்காடு வயல்வெளியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து அவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

​முன்னதாக, இவருடன் சென்ற குழந்தை கொத்தியாபுலை வயல் பகுதியில் தனியாக அழுதுகொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.

கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட பெண் வழங்கிய வாக்குமூலத்தின்படி, அவர் விழுந்து கிடந்த அதே கிணற்றுக்குள் அடையாளம் காண முடியாத அளவுக்கு அழுகிய நிலையில் மற்றுமொருவரின் சடலம் காணப்படுவதாகத் தெரியவந்துள்ளது. அந்தச் சடலம் பல நாட்களுக்கு முன்னரே அங்கு வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மீட்கப்பட்ட தாய் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.

​சம்பவம் குறித்து கொக்கட்டிச்சோலை பொலிஸாரும், தடயவியல் பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கிணற்றில் காணப்படுவதாகக் கூறப்படும் சடலத்தை மீட்பதற்கும், அது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்கும் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

​படுவான் கரைப் பகுதியை அதிரச் செய்துள்ள இந்தச் சம்பவம், திட்டமிடப்பட்ட குற்றச் செயலா அல்லது விபத்தா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
புதியது பழையவை