மட்டக்களப்பு: வவுணதீவு பகுதியில் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த பெண், பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தற்போது அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலங்களில் காணப்படும் முரண்பாடுகள் மற்றும் சிசிடிவி (CCTV) ஆதாரங்கள் வழக்கை புதிய கோணத்திற்கு இட்டுச் சென்றுள்ளன.
மட்டக்களப்பு வவுணதீவு பகுதியைச் சேர்ந்த குறித்த பெண், காணாமல் போயிருந்தார். தீவிர தேடுதலுக்குப் பிறகு, நேற்று முன்தினம் தாந்தாமலை - நெல்லிகாடு பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து அவர் உயிருடன் மீட்கப்பட்டார். அவருடன் காணாமல் போன அவரது இரண்டரை வயதுக் குழந்தையும் சில கிலோமீட்டர் தொலைவில் பத்திரமாக மீட்கப்பட்டிருந்தது.
வாக்குமூலத்தில் குழப்பம்
சிகிச்சையின் பின்னர் காவல்துறையினரிடம் அந்தப் பெண் அளித்த வாக்குமூலத்தில், தான் நகரில் இருந்து முச்சக்கர வண்டியில் வந்தபோது, தன்னுடன் வந்த மற்றொரு பெண் வழங்கிய குளிர்பானத்தை அருந்தியதாகவும், அதன்பின் சுயநினைவை இழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அவர் முச்சக்கர வண்டியில் ஏறியதாகக் குறிப்பிட்ட இடங்களை காவல்துறையினர் கள ஆய்வு செய்தபோது, அவரது கூற்றுகளுக்கும் அங்குள்ள நிலைமைகளுக்கும் இடையே பாரிய முரண்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது காவல்துறையினர் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணையில் சிக்கிய மர்மப் பெண்
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் முன்னெடுத்த தீவிர விசாரணையில் சில முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
CCTV ஆதாரங்கள்: அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பாதிக்கப்பட்ட பெண்ணை மற்றொரு பெண் பின்தொடர்ந்து செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் பயணித்ததாகக் கூறப்படும் முச்சக்கர வண்டி தற்போது அடையாளம் காணப்பட்டு, அதன் சாரதியிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தப் பெண்ணுக்கு ஏதேனும் மயக்க மருந்து அல்லது போதைப்பொருள் வழங்கப்பட்டதா என்பதைக் கண்டறிய சிறப்பு மருத்துவப் பரிசோதனைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணும் குழந்தையும் தற்போது நலமாக உள்ள போதிலும், அதே கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட மற்றொரு பெண்ணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இந்த உயிரிழப்புக்கும், மீட்கப்பட்ட பெண்ணின் சம்பவத்திற்கும் ஏதேனும் தொடர்புள்ளதா என்பது குறித்து கொக்கட்டிச்சோலை காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.