களைக்கொல்லிக்கு சிறுநீரையா பாவிப்பது? - பா.அரியநேத்திரன்

சேதனப் பசளை என்ற மாயை தற்போதைய அரசாங்கத்தினால் புகுத்தப்பட்டுள்ளது. அப்படியாயின் களைக்கொல்லிக்குச் சிறுநீரையா பாவிப்பது? சேதனப் பசளை மூலம் விவசாயிகளுக்கு ஏற்படப் போகும் நஷ்டத்திற்கு நஷ்டஈடு வழங்கும் முன்மொழிவையும் எதிர்வரும் வரவு செலவுத் திட்ட அறிக்கையில் இணைத்துக் கொள்ளுங்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் போரதீவுப்பற்று வெல்லாவெளியில் இடம்பெற்ற விவசாயிகளின் பிரச்சனைகளுக்கான தீர்வு கோரிய போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு விவசாயிகளினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்தப் போராட்டத்திற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கின்றோம்.

உண்மையில் இதன் முக்கிய காரணம் என்னவென்றால். சேதனப் பசளை என்ற மாயை தற்போதைய அரசாங்கத்தினால் புகுத்தப்பட்டுள்ளது. உலகத்திலே எந்த நாட்டிலும் சேதனப் பசளையை முழுமையாகப் பாவித்துப் பயன்பெற்ற நாடு என்று எதுவும் இல்லை.

சவால் விடுகின்றேன், எந்த நாட்டில் சேதனப் பசளை முழுமையாகப் பாவித்து விளைச்சலை அதிகரித்திருக்கின்றார்கள் என்று முடியுமானால் கூறட்டும்.

கடந்த வருடம் நேபாளத்தில் முழுமையாகச் சேதனப் பசளை பாவிக்க வேண்டும் என்று கூறப்பட்டாலும் கூட மக்களின் எழுச்சி காரணமாகவும், ஆய்வுகளின் காரணமாகவும் 2035ம் ஆண்டு வரை அதனைப் பிற்போட்டிருக்கின்றார்கள்.

ஆனால் நம் நாட்டில் சேதனப் பசளை மாயையைக் கூறிக்கொண்டு எங்கள் விவசாயிகளை நஷ்டத்திற்குள் தள்ளும் செயற்பாடாகவே நாங்கள் இதனைப் பார்க்கின்றோம்.

 மட்டக்களப்பு மாவட்டத்திலே தற்போது பெரும்போகச் செய்கை ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
அதன் விளைச்சல் குறையுமாக இருந்தால் விவசாய அமைச்சரும், அரசாங்கமும் பதில் கூற வேண்டும். இதற்கான நஷ்டஈடுகளை தற்போதே நீங்கள் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் சேதனப் பசளை பாவித்து ஒரு ஏக்கருக்கு நாலில் ஒரு பங்கு விளைச்சலையே பெற முடியும்.

சேதனப் பசளை விடயத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் ஒரு திட்டமிடல் இல்லாமல் திடீரென செய்யச் சொன்னால் விவசாயிகள் என்ன செய்ய முடியும். இன்று இலங்கையில் பல இடங்களில் யூரியா பசளை அடுக்கி வைத்திருக்கின்றார்கள். அது யாருக்கு விற்பதற்காக வைக்கப்பட்டிருக்கின்றது.

எனவே படிப்படியாக இதனை மாற்ற வேண்டுமே தவிர திடீரென இராணுவ நடவடிக்கை மூலம் செயற்படுத்துங்கள் என்று சொல்வதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

பசளை விடயத்தில் சேதனம் அசேதனம் என்ற சொல்லுகின்றீர்கள். ஆனால், களைக்கொல்லிக்கு என்ன செய்வது சிறுநீரையா நாங்கள் பாவிப்பது? களைக்கொல்லியைப் பாவித்து இருக்கும் களைகளை அழித்தால் தான் விவசாயிகளிடமிருந்து விளைச்சலைப் பெற முடியும்.
அதற்கும் சேதன நாசினியா? இரசாயன நாசினியா? என்பது தெரியாமல் இருக்கின்றது.

 இவ்வாறு பூரண விளக்கம் இல்லாமல் விவசாயிகள் திண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
விவசாயிகளுக்கான தகுந்த தீர்வு தேவை. எனவே எதிர்வரும் நவம்பர் மாதம் வெளியிடப்படவுள்ள நிதி அமைச்சரின் வரவு செலவுத் திட்டத்தில் சேதனப் பசளை மூலம் விவசாயிகளுக்கு ஏற்படப் போகும் நஷ்டத்திற்கு நஷ்டஈடு வழங்கும் முன்மொழிவையும் இணைத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை