அரசியற் கட்சிகளின் வேட்பாளர்கள், வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது, தமது சொத்துக்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதை கட்டாயமாக்குவது குறித்து யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் சட்ட சீர்த்திருத்தங்களை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தேர்வுக்கு குழுவிடம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள ஊடக வரையறைகளை மீறி செயற்படும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக, நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, தமக்கு அதிகாரம் வழங்குமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த ஊடக வரையறைகளை நாடாளுமன்றத்தில் முன்வைத்து அனுமதியைப் பெற்றுக் கொள்வது கட்டாயமானதாகும் எனவும், தேர்தல் காலத்தில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் வகையில், உரிய முறைமைகள் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை இரத்து செய்யும் விடயத்தில், விரிவான மறுசீரமைப்புக்களை கொண்டுவர வேண்டும் எனவும், நாடாளுமன்ற தேர்வுக்கு குழுவிடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
