மட்டக்களப்பு ஆரையம்பதியில் இருந்து கல்முனை பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் கேரள கஞ்சா எடுத்துச் சென்ற கஞ்சாவியாபரி ஒருவரை 2 கிலோ கிராம் கஞ்சாவுடன் கல்முனை பாண்டிருப்பில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை (22) மாலை 5 மணியளவில் கைது செய்துள்ளதாக கல்முனை காவல்துறையினர் தெரிவித்தனர்.
விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கல்முனை காவல்துறையினருடன் விசேட புலனாய்வு பிரிவினர் இணைந்து கல்முனை பாண்டிருப்பு பாடசாலைக்கு முன்னாள் வீதியில் கண்காணிப்பில் சம்பவதினமான இன்று மாலை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன் போது மட்டக்களப்பு ஆரையம்பதியில் இருந்து கல்முனை நோக்கி மோட்டார்சைக்கிளில் வியாபாரத்துக்காக கேரள கஞ்சாவை எடுத்துச் சென்றவரை காவல்துறையினர் மடக்கிபிடித்து அவரிடமிருந்து 2 கிலோ கிராம் கேரள கஞ்சாவை மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் மட்டு ஆரையம்பதியைச் சேர்ந்தவர் எனவும் இவரை விசாணையின் பின்னர் நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
