நாட்டில் நிதி நெருக்கடிக்குள்ளும் நியமனம் வழங்கியிருப்பது என்பது ஒவ்வொரு வீட்டிற்கும் வாழ்வாதாரம் வழங்குவது போன்றாகும் என மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
ஒரு இலட்சம் வேலைவாய்ப்பின் இரண்டாம் கட்ட நியமனங்களை வவுனியா நகர மண்டபத்தில் நேற்று (25) வழங்கி வைத்துவிட்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கோட்டாபய ராஜபக்ஸ அவர்களின் சுபீட்சத்தினுடைய துரித அபிவிருத்தி என்ற எண்ணக்கருவிற்கு அமைய அதனை செய்து முடிக்க ஆர்வமாக தலைமை தாங்கிய பிரதமர், நிதியமைச்சர் மற்றும் ஏனைய சிரேஸ்ட அமைச்சர்களும் சௌபாக்கிய வேலைதிட்டத்தினை செய்து முடிக்க காட்டுகின்ற அக்கறையினால் தான் இந்த நியமனங்கள் வழங்கப்படுகின்றது.
கடந்த கால தலைவர்களால் இவ்வாறான செயற்திட்டங்கள் அமுல்படுத்தப்படும் என்று இருந்த போது எதிர் தலைவர்களால் கேலிக்கையாக பார்க்கப்பட்டது.
நடைமுறைக்கு சாத்தியமில்லை என விமர்சிக்கப்பட்டது. அதனை பொய்யாக்கும் செயலாக தான் முதல் கட்டமாக 35000 நியமனங்கள் வழங்கப்பட்டு, இரண்டாம் கட்டமாக தான் இந்த நியமனங்கள் வழங்கப்படுகின்றது.
வன்னி மாவட்டத்தில் கிட்டத்தட்ட 262 நியமனங்கள் வழங்கப்படுகின்றது. தற்காலத்தில் கோவிட் வைரஸ் தாெற்றினால் உலக ரீதியில் அனைத்து நாடுகளும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றது. இதற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல. இவ்வாறான நிதி நெருக்கடிக்குள்ளும் நியமனம் வழங்கியிருப்பது ஒவ்வொரு வீட்டிற்கும் வாழ்வாதாரம் வழங்குவது போன்றாகும்.
கடந்த காலங்களில் வருமானம் குறைந்த கல்வி தகமை குறைந்தவர்களுக்கு அரச நியமனம் வழங்கப்படுவதில்லை. ஆனால் அவ்வாறு தகமை குறைந்த ஒரு இலட்சம் பேருக்கு அரச நியமனம் வழங்கப்படுவதாக ஜனாதிபதி, அனைத்து அமைச்சர்களும் செயல்படுத்த காட்டும் உத்வேகத்தில் தெரிகின்றது.
மக்கள் மேல் அரசாங்கம் வைத்திருக்கும் கரிசனை. இன்று நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருந்தாலும் மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்த வேண்டும் என்பதில் அரசாங்கம் குறியாக இருப்பதனால் தான் வேலைவாய்ப்பு, உள்ளக வீதி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
கடந்த காலத்துடன் ஒப்பிட்டு பார்க்கின்றபோது பாரிய அபிவிருத்தி நடைபெற்றிருக்கின்றது. 5000 குள அபிவிருத்தி வேலை திட்டத்திலும் வன்னி மாவட்டத்தில் பல நூற்றுக்கணக்கான குளங்கள் அபிவிருத்தி செய்யப்படுள்ளது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உட்கட்டமைப்பு வேலைதிட்டங்களும் நடைபெற்று கொண்டிருக்கின்றது. குறிப்பாக எமது பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக பல அமைச்சர்களால் பல வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு இருக்கின்றது.
கடந்த பல வருடங்களாக வரவு செலவு திட்டத்திற்குரிய பாதீட்டினை வாசிப்பதற்கு அதிகாரிகள் எடுக்கும் முடிவு தான் ஆனால் இந்த தடவை கிராமத்திற்கு இடையிலான உரையாடல் என்ற நிகழ்சி மூலமும், ஒவ்வொரு பிரதேச சபை வட்டாரங்களுக்குரிய நிதி கிராம சேவை பிரிவுகளுக்கான நிதியும் பாரிய அளவில் ஒதுக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக கிராமத்திற்கான உரையாடல் நிகழ்ச்சி மூலம் 3 மில்லியன் நிதி ஒவ்வொரு கிராம செயலர் பிரிவிற்கும் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அதேபோன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள் என்ற ரீதியில் 100 மில்லியன் வழங்கப்பட்டு வேலைதிட்டங்கள் , அபிவிருத்தி திட்டங்கள் செயல்படுத்தபட இருக்கின்றது.
அபிவிருத்திகள் ஒரு பக்கம் நடந்தாலும் மக்களுடைய உரிமைகள் குறிப்பாக சொல்வதென்றால் காணிப்பிரச்சினைகள் இது சம்பந்தமாக நாங்கள் காணி சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், காடு சம்பந்தப்பட்ட அமைச்சர்களையும் நாங்கள் அழைத்திருக்கின்றோம்.
ஏனெனில் அவர்கள் மூலமே சரியான தீர்வினை நாம் பெறமுடியும். ஏனெனில் அங்கிருந்து அனுப்புகின்ற சுற்றறிக்கையின் படியே இங்கிருக்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றார்கள்.
எனவே கோவிட் தெற்றினாலே இந்நடவடிக்கைகள் தாமதமடைந்திருக்கின்றது. விரைவாக இது சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தீர்வினை பெற்று தருவார்கள் என நினைக்கின்றேன்.
நியமனம் பெற வந்திருப்பவர்களிடம் நாம் எதிர்பார்ப்பது உங்களுக்கு தருகின்ற நியமனங்களை மக்களுக்கு ஏற்ற விதத்திலும் மக்கள் பாதிக்கப்படாத வகையிலும் அரசாங்கத்திற்கு விசுவாசமான முறையிலும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இந்த நியமனம் மூலம் உங்கள் குடும்பம் , உறவுகள் நன்மையடைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன்
அதனடிப்படையில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபனின் சிபார்சின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 39 இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வைத்து பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் ஆசிர்வாதத்துடன், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அவர்களின் நெறிபடுத்தலில் எமது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக நாம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக 39 பேருக்கு நியமனப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.இரண்டாம் கட்டமாக இது வழங்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் மேலும் பல இளைஞர், யுவதிகளை சிபார்சு செய்து வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுப்போம். எமது நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை தலைதூக்கியுள்ள நிலையில் இந்த நியமனம் எமது இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
எனவே இதனை இளைஞர், யுவதிகள் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். கோவிட் அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கம் இந்த வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது. இதனை புரிந்து கொள்ள வேண்டும்.மக்கள் நலனை கருத்திற்கொண்டே அரசாங்கம் தனது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.



