மட்டக்களப்பில்-முச்சக்கரவண்டி சாரதியிடம் இலஞ்சம் பெற்ற பொலிஸார்

மட்டக்களப்பில் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாது முச்சக்கரவண்டி செலுத்திச் சென்றவரிடம் இலஞ்சம் பெற்ற மூன்று பொலிஸார் தற்காலிகமாக கடமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் இருந்து செங்கலடி பிரதேசத்திற்கு முகத்துவாரம் வீதி ஊடாக முச்சக்கரவண்டியில் சம்பவதினமான நேற்று மாலை 5.30 மணியலவில் சென்று கொண்டிருந்த போது, சவுக்கடி பாலத்திற்கு அருகில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போக்குவரத்து பொலிஸார் முச்சக்கரவண்டியை நிறுத்தி சோதனையிட்ட நிலையில் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்றுள்ளதை கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து முச்சக்கரவண்டி சாரதியிடம் போக்குவரத்து பொலிஸார் சாரதி அனுமதிப்பத்திரமின்றி செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபோவதாகவும் அதனை செய்யாது அங்கிருந்து விடுவிக்க 10,000 ரூபா இலஞ்சமாக கோரியுள்ளனர்.

இதனையடுத்து 5,000 ரூபாய் தான் இருக்கின்றது என 5,000 ரூபாவை போக்குவரத்து பொலிஸார் இலஞ்சமாக பெற்ற பின்னர் அவரை விடுவித்ததையடுத்து முச்சக்கரவண்டி சாரதி உடனடியாக மட்டு. தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு சென்று தன்னிடம் 5,000 ரூபா இலஞ்சமாக போக்குவரத்து பொலிஸார் பெற்றுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக கிழக்கு பிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தலில் உடனடியாக பொலிஸ் அத்தியட்சகர் குமாரசிறி தலைமையில் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றிவந்த 3 பொலிஸாரையும் நேற்று உடனடியாக கடமையில் இருந்து இடை நிறுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை