2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அரசாங்க உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கங்களின் சம்மேளனம், கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
அத்துடன், 16,000 ரூபா வேதனம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்படாமை தொடர்பில் அரசாங்க உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கங்களின் சம்மேளனம், அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் இலங்கையில் உள்ள அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை எனவும் இதனால் 1.5 மில்லியன் அரச உத்தியோகத்தர்களும் அவர்களை நம்பி வாழும் ஏறக்குறைய 6 மில்லியன் மக்களும் வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு மாதாந்தம் 58,000 ரூபா அவசியம் என அண்மைய கணக்கெடுப்பொன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலைகள் வேகமாக அதிகரித்து வருவதால் இந்நிலை மிகவும் தீவிரமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் பாராமுகமாக செயற்படுமாயின் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடபோவதாக அரசாங்க உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
