இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் விடயத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டுமே தவிர, நிதி தேவையில்லை என வவுனியா மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் சி.ஜெனிற்றா தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நட்ட ஈடு வழங்குவதற்காக, அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தில் 300 மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கியுள்ளது.
இதன்படி, குறித்த நிதியொதுக்கீடு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
போர் முடிவடைந்து 12 வருடமாகியுள்ள நிலையில், தமது உறவுகளுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காகவே தாம் போராடி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, தமக்கு நிதி தேவையில்லை என்பதை நாட்டுக்கும், சர்வதேசத்திற்கும் முன்னதாகவே கூறியுள்ளதாகவும் வவுனியா மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் சி.ஜெனிற்றா குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நட்ட ஈட்டை வழங்குவதற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ள போதிலும், தமது உறவுகளைக் காண்பித்து, பெரும்பான்மை மக்களுக்கே குறித்த நிதி வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், தமக்கு நீதியைப் பெற்றுத் தருமாறும், குறித்த நிதிஒதுக்கீட்டை தாம் நிராகரிப்பதாகவும், வவுனியா மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் சி.ஜெனிற்றா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
