ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினரால் கொழும்பில் நேற்று முன்னெடுக்கப்பட்ட பாரிய எதிர்ப்பு பேரணி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹல் தல்துவ இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்டமை கண்டறியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பின்பற்றப்பட வேண்டிய புதிய சுகாதார விதிமுறைகள் தொடர்பான புதிய வழிகாட்டல் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஊடாக நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டல்களில் அனுமதியற்ற பொதுக்கூட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
