மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று வெல்லாவெளியில் நீர்பாசன பணிப்பாளர் நாயகத்தின் பெயரில் அணைக்கட்டு திறந்து
நீர்பாசன திணைக்களம் ஊடாக நாடெங்கும் முன்னெடுக்கப்பட்ட 2000வேலைத்திட்டங்கள் முடிவுறும் நிலையில் உள்ளதாகவும் அவற்றினை விரைவாக மக்கள் பாவனைக்கு வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும் நீர்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிஹால் ஸ்ரீவர்த்தன தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில்; நிர்மாணிக்கப்பட்ட நிஹால் ஸ்ரீவர்த்தன அணைக்கட்டு நேற்று திறந்துவைக்கப்பட்டது.
நீர்பாசன திணைக்களத்தின் சுமார் 23மில்லியன் ரூபா செலவில் இந்த மாபெரும் அணைக்கட்டு அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.
வெல்லாவெளி,கூழாவடி பகுதியில் வயல்வெளிகளை ஊடறுத்ததாக அமைக்கப்பட்டுள்ள இந்த அணைக்கட்டு காரணமாக நவகிரி நீர்பாசனத்தின் மூலம் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மூன்று போகங்கள் நெற்செய்கைகளை முன்னெடுக்கமுடியும்.
அத்துடன் வெல்லாவெளி பிரதேசம் தொடர்ச்சியாக வெள்ள அனர்த்த நிலைக்கு உள்ளாவதுடன் வருடாந்தம் பெருமளவான வயல் நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கும் நிலையேற்படுகின்றது.
இந்த அணைக்கட்டு நிர்மாணிக்கப்பட்டதன் மூலம் இப்பகுதியில் ஏற்படும் வெள்ள நிலைமையினை கட்டுப்படுத்தி விவசாய நிலங்களை பாதுகாக்கமுடியும் என இங்கு தெரிவிக்கப்பட்டது.
நவகிரி நீர்பாசணப்பொறியியலாளர் திருமதி கீதா அருணனின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட நீர்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் ந.நாகரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த அணைக்கட்டு திறப்பு விழாவில் நீர்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிஹால் ஸ்ரீவர்த்தன பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.
இந்த அரசாங்கம் விசேடமாக பாரிய நிதியினை இந்த நீர்பாசன அபிவிருத்திக்காக அதாவது விவசாயம் மற்றும் நீர்ப்பாசன வளர்ச்சிக்காக ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் இதன்போது கருத்து தெரிவித்த நீர்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிஹால் ஸ்ரீவர்த்தன தெரிவித்தார்.
ஜனாதிபதி மற்றும் அமைச்சர் பிரதேசங்கள் ரீதியில் சென்று அங்கிருக்கும் நீர்ப்பாசன விடயங்களை ஆராய்ந்து தீர்மானிக்குமாறு சொல்லியிருக்கின்றார்கள். எங்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்கள்.அதனை முன்னெடுக்கவேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு உள்ளது எனவும் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
விசேடமாக மட்டக்களப்பில் இரு தினங்களுக்கு களவிஜயம் மேற்கொண்டுள்ளேன். இதன் பிரதான நோக்கம் இந்த வருடத்திற்குள் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மூலம் செய்யப்பட்ட வேலைத்திட்டங்களின் நிலைமைகள் பற்றியும், அடுத்த ஆண்டு நீர்ப்பாசனத்தை மேம்படுத்தும் முகமாக எவ்வகையான திட்டங்களை மேற்கொள்ள முடியும் என்பது பற்றியும் ஆராய்வதற்கே வந்துள்ளேன்.
அதைவிடுத்து இவ்வாறான திறப்பு நிகழ்வுகளில் கலந்து கொண்டு திறந்து வைப்பது மாத்திரம் அரச அதிகாரி என்ற ரீதியில் எனது செயற்பாடுகள் அல்ல.
அரச அதிகாரி என்ற ரீதியில் எங்களுக்கிருக்கும் கடமையானது, அரசினால் கொண்டு வரும் திட்டங்கள் இருப்பின் அதனை நிறைவேற்றுதே எங்களது பிரதான நோக்கமாக இருக்கும். அந்த வகையில் இந்த அரசாங்கம் விசேடமாக பாரிய நிதியினை இந்த நீர்பாசன அபிவிருத்திக்காக அதாவது விவசாயம் மற்றும் நீர்ப்பாசன வளர்ச்சிக்காக ஒதுக்கீடு செய்துள்ளது.
அதன்படி ஜனாதிபதி மற்றும் அமைச்சர் எங்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்கள். பிரதேசங்கள் ரீதியில் சென்று அங்கிருக்கும் நீர்ப்பாசன விடயங்களை ஆராய்ந்து தீர்மானிக்குமாறு சொல்லியிருக்கின்றார்கள்.
அதேபோல் பிரதேசத்தின் அரசியல் பிரமுகர்கள் பிரதேச மட்ட பிரமுகர்கள் சிறந்த முறையில் நீர்ப்பாசனத் திணைக்களத்துடன் தொடர்பினைப் பேணி, இப் பிரதேசத்தின் நிர்ப்பாசனம் தொடர்பில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார்கள்.
நாங்கள் அவர்களின் அக்கறையினை மதித்து அவர்களின் முன்மொழிவுகள் தொடர்பிலும் விசேடமாக அவதானித்துள்ளோம்.
மட்டக்களப்பு மாவட்ட ரீதியில் பாரிய நீர்ப்பாசன அபிவிருத்திச் செயற்பாடுகளைச் செய்துள்ளோம். அவை தற்போது முடிவுறும் தருவாயில் உள்ளன. அதன்படி நாடு பூராகவும் சுமார் இரண்டாயிரம் வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு நடைபெறும் வேலைத்திட்டங்களை எதிர்வரும் வாரங்களில் எமது அமைச்சர் ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் சென்று பார்வையிடுவதற்கு எண்ணியுள்ளார்.



