முருகப்பெருமான் நோக்கி அனுஸ்டிக்கப்படும் கந்தசஸ்டி விரதத்தின் சூரசம்ஹார நிகழ்வுகள் நேற்று மாலை ஆலயங்களில் நடைபெற்றன.
மும்மலப் பிடியிலிருந்து விடுதலை பெற்று முத்தியின்பத்தை அடைதலே ஆன்மாக்களுக்கு வகுக்கப்பட்ட இலக்கு. அசுரகுணங்களை அழித்து நன்னிலை அடைதலை குறியிட்டு நிற்கும் நிகழ்வாக சூரன் போர் விளங்குகிறது.
கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நேற்று (10) மாலை சூரசம்ஹார நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருகக்ள் தலைமையில் மூலமூர்த்திக்கும் முருகப்பொருமானுக்கும் விசேட பூஜைகள் நடைபெற்ற முருகப்பெருமான் பக்தர்கள் படை சூழ ஆலய வெளிவீதிக்கு வருகைதந்து சூரனுடன் போர்புரியும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது சுகாதார விதிமுறைகளுடனும், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு ஆலய வளாகத்தில் எழுந்தருளிய முருகப் பெருமான் சூரர்களுடன் போர் செய்து அவர்களை வதம் செய்து, அடியார்களுக்கு அருள்பாலித்தார்.
இறுதியாக மாமரமாக நின்ற சூரபத்மனை வதம் செய்து சூரனை சேவல் கொடியாகவும் மயில்வாகனமாகவும் ஆக்கி சூரபத்மனுக்கு முக்தியளித்தார்.




