யாழ் இளைஞனிற்கு வந்த 3000 கோடி ரூபாய்-அதிர்ச்சியில் மத்திய வங்கி!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு வந்த 3,001 கோடி ரூபாவை பெறும் நோக்கத்துடன், இளைஞனின் உறவினர் வீட்டிற்கு சென்று அச்சுறுத்தல் விடுத்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென்னிலங்கையை சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அரியாலையை சேர்ந்த குறித்த இளைஞனின் வங்கிக் கணக்கில் கடந்த வருடம் 3,001 கோடி ரூபா பணம் வைப்பிலிடப்பட்டது.

இதனால் சந்தேகமடைந்த மத்திய வங்கி, அந்த பணத்தை முடக்கிய நிலையில் குறித்த பணம் கனடாவில் இணையத்தளம் மூலமாக மோசடி மூலமாக திருடப்பட்ட பணமென கருதப்படுகிறது.

இதனையடுத்து சிஐடியினரால் கைது செய்யப்பட்ட இளைஞன், அந்த பணத்திருட்டில் அவர் தொடர்புபட்டதற்கான ஆதாரங்கள் இருக்கவில்லை என்பதால் பின்னர் விடுவிக்கப்பட்டார். பின்னர் , வவுனியாவில் அந்த இளைஞன் தங்கியிருந்த போது, மத்திய வங்கி ஊழியர் என கூறிய ஒருவர் உள்ளிட்ட குழுவினால் இளைஞன் கடத்தப்பட்ட நிலையில், அவர் தப்பியோடி பொலிசில் சரணடைந்ததை தொடர்ந்து, கடத்தல்காரர்கள் கைதாகினர்.

அதன்பின்னரும், அந்த இளைஞனின் மூலமாக பணத்தை பெற பல தரப்புக்கள் முயன்று வந்ததாக கூறப்படுகிறது.

 இதனால் இளைஞன் அடையாளம் தெரியாத இடமொன்றில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அரியாலையிலுள்ள இளைஞனின் உறவினர்கள் வீட்டிற்கு நேற்றிரவு சென்ற குழுவொன்று, குடும்பத்தினரை அச்சுறுத்தியுள்ளது. அதோடு அவர்கள் இளைஞனின் இருப்பிடத்தை கேட்டதுடன், அவரது தொலைபேசி இலக்கத்தையும் கோரியுள்ளனர்.

அதோடு இளைஞன் சம்மதித்தால் பணத்தை உடனடியாக எடுக்கலாம், அவருடன் பேச வேண்டுமென கூறி, இளைஞனின் தொடர்பேற்படுத்துமாறு அச்சுறுத்தியுள்ளனர்.

 இதனையடுத்து சம்பவம் குறித்து குடும்பத்தினர் யாழ்ப்பாணம் பொலிசாருக்கு அறிவித்ததையடுத்து, குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
புதியது பழையவை