மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டில் 293 வீதி விபத்துகளில் 65 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இது கடந்த ஆண்டிலும் பார்க்க குறைவடைந்து காணப்படுவதாக மாவட்ட போக்குவரத்து பொலிஸ் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 01ஆந் திகதி தொடக்கம் டிசம்பர் 31 வரையான காலப்பகுதியில் மாவட்டத்திலுள்ள 13 பொலிஸ் பிரிவுகளிலும் 336 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
இவ்விபத்துகளில் சிக்கி சிறிய காயமடைந்தோர் 113 பேரும், கடுமையான காயமடைந்தோர் 119 பேரும் அடங்குவதுடன் சொத்துகளுக்கான சேதம் 20 பதிவாகியுள்ளதுடன், 64 இறப்புக்களும் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை இவ்வாண்டு ஜனவரி 01ஆந் திகதி தொடக்கம் டிசம்பர் 15 வரையான காலப்பகுதியில் மாவட்டத்திலுள்ள 13 பொலிஸ் பிரிவுகளிலும் 293 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
இவ்விபத்துகளில் சிக்கி சிறிய காயமடைந்தோர் 105 பேரும், கடுமையான காயமடைந்தோர் 99 பேரும் அடங்குவதுடன், சொத்துகளுக்கான சேதம் 24 பதிவாகியுள்ளதுடன், 65 இறப்புக்களும் இடம்பெற்றுள்ளன.
இவற்றில் கல்குடா பொலிஸ் பிரிவில் கடந்த 2020ஆம் ஆண்டு 5 விபத்துக்களில் 02 மரணங்கள் இடம்பெற்றிருந்ததுடன், இவ்வாண்டு ஒரேயொரு விபத்து சிறிய காயங்களுடன் பதிவாகியுள்ளதுடன், உயிரிழப்புகள் எதுவும் பதிவாக வில்லை.
இதேபோன்று கொக்கட்டிச்சோலை வெல்லாவெளி, மட்டக்களப்பு மற்றும் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுகளிலும் குறைவாக வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.