நாட்டில் நிதியும் இல்லை, நீதியும் இல்லை


இந்த நாட்டில் நிதியும் இல்லை, நீதியும் இல்லாத சூழ்நிலையே இன்று உள்ளது. இந்த நாட்டில் நீதியமைச்சர் இராஜினாமா செய்யும் நிலையில் இந்தநாடு உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நத்தார் திருப்பலி பூஜையின்போது ஆயுதக்குழுவினால் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான 
மாமனிதர் அமரர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 16வது நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.

25.12.2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியால் தேவாலயத்தில் நள்ளிரவு நத்தார் ஆராதனையின்போது அவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் அவரது மனைவி படுகாயமடைந்திருந்தார்.

அமரர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 16வது நினைவு தினம் நேற்று மாலை மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் பொன்.செல்வராஜா,தமிழரசுக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான, கட்சி முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
மாமனிதர் அமரர் ஜோசப்பரராஜசிங்கத்தின் படுகொலைக்குக் காரணமாக அமைந்தவர்கள் இன்று சுதந்திரமாக நடமாடித்திரிகின்றனர். 

இந்த நாட்டில் நிதியும் இல்லை, நீதியும் இல்லாத சூழ்நிலையே இன்று உள்ளது. இந்த நாட்டில் நீதியமைச்சர் இராஜினாமா செய்யும் நிலையில் இந்தநாடு உள்ளது.
அவ்வாறான நிலையில் மாமனிதர் அமரர் ஜோசப்பரராஜ சிங்கத்திற்கு இந்த அரசாங்கம் நீதியைத்தரும் என்று எதிர்பார்க்கமுடியாது. இவ்வாறான நிலையில் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பெண்களுக்கு நடந்த அநீதிகள் தொடர்பாக ஊடகங்களில் பேசியிருந்தார்.

இன்று அவரெல்லாம் தூயவராக வந்து மட்டக்களப்பில் பெண்களுக்கு எதிரான அநீதிகள் பற்றிப் பேசுவது என்பது கவலையான விடயமாகும். இவ்வளவு நீதி கோரும் அவர் ஏன் அன்று ஜோசப்பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டபோது நீதி கோரவில்லை.
அவருக்கு அந்த குற்றச்சாட்டு இருந்தது, ஆனால் நீதிமன்றம் ஊடாக ஏதோவொரு வகையில் வெளிவந்துவிட்டார். அவர் அந்த கொலையினை செய்யவில்லையென்றால் ஏன் அந்த கொலைக்கு எதிரான நீதி கோரமுடியாது.

 ஜோசப்பரராஜசிங்கம் ஐயாவினை நினைவு கூரப்படும் இந்த வேளையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் ஒரு பட்டியலே நீதி கோரப்படாத நிலையில் உள்ளது.

கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரால், பிரேமினி என்னும் அரசார்பற்ற நிறுவனத்தில் வேலைசெய்த பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இவர்களுக்காக ஏன் நீதி கோரமுடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகிய நாங்கள் நீதி கோரியே வருகின்றோம்.

இதேபோன்று வர்சா ரூத் ரெஜி என்னும் 06வயது சிறுமி பணத்திற்காகக் கடத்தப்பட்டுக் கொலைசெய்யப்பட்டார். தினேஸிகா சதீஸ்குமார் எட்டு வயது சிறுமி மட்டக்களப்பில் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டார்.

 இன்று தூயவர்களாக மாறி நீதி கோருகின்றவர்கள் ஏன் இவர்களுக்காக நீதி கோரமுடியாது. நீளமான படுகொலை செய்யபட்டவர்களின் பட்டியலே உள்ளது.
நாங்கள் இவர்களுக்கான நீதியைக் கோரிவருகின்றோம். நீங்கள் தூயவர்களாகவிருந்தால் எங்களுடன் இணைந்து இவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க எங்களுடன் வாருங்கள் என்று பகிரங்கமாக அழைக்கின்றேன். இந்த மாவட்டத்தில் மீண்டும் அராஜகம் ஏற்பட்டுவருகின்றது.

இதற்கு காரணம் பொலிஸாருக்கும் அரசாங்கத்துடன் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் உள்ள நல்ல உறவாகும். இதற்குக் காரணம் மண்மாபியாக்களும் மண் வியாபாரங்களுமாகும். அவர்கள் வியாபாரம் செய்யும் போது பொலிஸார் கண்டுகொள்ளாமல் இருக்கவேண்டும் என்பதற்காக பொலிஸார் தவறு செய்யும் போது இவர்கள் கண்டுகொள்ளாமலிருக்கின்றனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினைப் பொறுத்தவரை சிங்களவராகவிருக்கலாம், முஸ்லிம்களாக இருக்கலாம், தமிழர்களாக இருக்கலாம் எந்த இடத்தில் எவருக்கு அநீதி நடந்தாலும் அவர்களுக்கு நீதி கோரவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாகவிருக்கின்றோம்.

தமிழர்கள் மீது இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த அடக்குமுறை செயற்பாடுகளை இன்று முஸ்லிம் மக்கள் மீது காட்டப்படுகின்றது. 1980 காலப்பகுதிக்கு பின்னரும் முன்னரும் தமிழர்கள் மீது எவ்வாறான அடக்குமுறைகளை முன்னெடுத்தார்களோ அதே அடக்குமுறையினை இன்று முஸ்லிம்கள் மீது பிரயோகிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

அதனைப் பார்த்து நாங்கள் சந்தோசப்படமுடியாது. அதற்கு நாங்கள் நீதி கோராவிட்டால் இன்று நாங்கள் ஜோசப் ஐயாவின் மரணத்திற்கு நீதி கோருவதற்குத் தகுதியில்லாதவர்களாக மாறிவிடுவோம். நாங்கள் எங்களுக்கு நடந்த அநீதிகளுக்கு நீதி கோரும்போது இன்று நடக்கும் அநீதிகளுக்கும் நாங்கள் நீதி கோரவேண்டும்.

அதனை எங்களது கட்சியின் ஒரு நிலைப்பாடாக எடுக்கவேண்டும். இன்று முஸ்லிம்களுக்கு அநீதிகள் நடக்கும்போது அதனை ஆதரிக்கின்றனர். வடக்கு கிழக்கில் நாங்கள் நிரந்தர தீர்வொன்றினை அடைவதாகவிருந்தால் அதில் இஸ்லாமிய மக்கள் இல்லாமல் தீர்வு ஒன்றும் இல்லை.

வடக்கு, கிழக்கில் தமிழர்களுக்கு மட்டும் ஒரு அரசியல் தீர்வு கிடைக்கும் என்று நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது. அதனை நாங்கள் அனைவரும் உணரவேண்டும். எம்மவர்களே முஸ்லிம் மக்களுக்கு எதிராகப் போராடவேண்டும் என்று கூறுவார்கள். இன்னுமொரு சமூகம் எவ்வாறு எமக்கு அநீதிகள் செய்ததோ நாங்களும் இன்னுமொரு சமூகத்திற்கு எதிராக அநீதி செய்யக்கூடாது.

அதுவே எனது நிலைப்பாடாகும். தமிழரசுக்கட்சியின் நிலைப்பாடும் அதுவாகத்தான் இருக்கும். தமிழ்-முஸ்லிம் இரு சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வே தேவையெனக் கட்சி யாப்பிலும் உள்ளது.

 பிள்ளையான்,வியாழேந்திரன் போன்றவர்கள் செய்கின்றார்கள் என்பதற்காக நாங்கள் அந்த அரசியலைச் செய்யமுடியாது.

அவ்வாறு செய்வதாகவிருந்தால் கட்சி யாப்பில் திருத்தம் கொண்டுவரப்பட்டு முன் கொண்டுசெல்லவேண்டும்.

 மயிலத்தமடு-மாதவனை பகுதியைப் பாதுகாப்பதற்கு அரசாங்கத்துடன் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை எங்களுக்கு ஒத்துழைக்குமாறு கோரியிருந்தோம். அவர்கள் இதுவரைக்கும் எந்த ஒத்துழைப்பினையும் வழங்கவில்லை.
பட்டிப்பளையில் வனஇலாகா காணிகள் அபகரிக்கப்படுகின்றன. அவற்றினை தடுத்து நிறுத்துவதற்கான அதிகாரம் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருக்கு இருக்கின்றது.

 கிழக்கு மாகாணத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் பெரும்பான்மை சமூகத்தினால் அபகரிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் பக்கமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்களுக்கு எதிராகத் துவேசங்களை வளர்த்துக் கொண்டிருந்தாலும் அதனை நாங்கள் செய்யமுடியாது. அவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களுக்கான தீர்வினை மறக்கவேண்டும்.

இதேபோன்று முஸ்லிம் மக்களுக்கும் சொல்கின்றார்கள், கிழக்கில் நாங்கள்தான் பெரும்பான்மை சமூகம்,நாங்கள் எதற்குத் தமிழ் மக்களுடன் இணைந்து வாழவேண்டும் என்று கூறுகின்றார்கள். அவர்களுக்குத் தமிழ் மக்களுடன் இணைந்துவாழ விருப்பம் இல்லையென்றால் இன்னும் 20வருடத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களே இல்லாதநிலையேற்படும்.
அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மாகாணசபை தேர்தல் வந்தால் அம்பாறையைச் சேர்ந்த தமிழ் பேசாதவர் ஒருவரை முதலமைச்சராகக் கொண்டுவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஒரு பெரும்பான்மை சமூகத்தினைக்கொண்ட ஆளுநரை வைத்துக்கொண்டே பல கஷ்டங்களை எதிர்கொண்டு வருகின்றோம் என தெரிவித்துள்ளார்.

புதியது பழையவை