உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை ஒத்திவைக்கத் திட்டம்?

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை ஒரு வருடத்தினால் ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கமைய அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனினால் இந்த விடயம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது குறித்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை என செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோருடன், அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனினால் கலந்துரையாடப்படவுள்ளதாகவும், இதன் பின்னர் இது தொடர்பில் அமைச்சரவையில் அவதானம் செலுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெற்ற தேர்தலின் மூலம் நியமிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் நிறைவடையவுள்ளது.

இந்த நிலையில், குறித்த உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலத்தை ஒரு வருடத்தினால் ஒத்திவைப்பதற்கு விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சருக்கு அதிகாரம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை