மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கண்டியனாறு ஆற்று பகுதியில் கசிப்பு தயாரிப்பு நிலையத்தை முற்றுகையிட்ட காவல்துறையினர் 90 ஆயிரம் மில்லிலீற்றர் கசிப்பு மற்றும் 2 இலச்சம் மில்லிலீற்றர் கோடாவுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) இரவு கைது செய்துள்ளதாக மாவட்ட விசேட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்.
காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று மாலை குறித்த ஆற்றுபகுதியை மாவட்ட விசேட குற்றவியல் விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையிலான காவல்துறையினர் சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.
இதன்போது கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஆண் ஒருவரை கைது செய்ததுடன் 90 ஆயிரம் மில்லிலீற்றர் கசிப்பு, 2 இலச்சம் மில்லிலீற்றர் கோடாவு மற்றும் கசிப்பு தயாரிப்பதற்கான உபகரணங்கள், பெரல் ஆகியவற்றை மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை கொக்கட்டிச்சோலை காவல்துறையினரிடம் ஒப்படைத்ததுடன் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.