இலங்கையில் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களில் 50 வீதமானோர் ஒமிக்ரோன் தொற்றாளர்களாக இருக்கக் கூடும் என சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய நாளில் நாட்டில் 891 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
கடந்த சில நாட்களில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கைக்கு அமைய நேற்றைய நாளிலேயே அதிக அளவானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களில் 50 வீதத்துக்கும் அதிகமானோர் ஒமிக்ரோன் தொற்றாளர்களாக இருக்கலாம் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக விரைவாக பூஸ்டர் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுமாறு அவர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 891 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 3 ஆயிரத்து 654 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 76 ஆயிரத்து 540 ஆக காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 11 ஆயிரத்து 784 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 330 ஆக உயர்வடைந்துள்ளது.
