மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஈச்சந்தீவு நாவற்கட்டு பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னத்தம்பி தவராசா வயது (60) என்பவர் தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று மாலை (09) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகறாறு காரணமாக தனது வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் தனது சகோதரியுடன் வாழ்ந்து வந்ததாகவும் நாளாந்தம் மீன் விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும் நேற்று மாலை தனது சகோதரியின் வீட்டிலிருந்து வெளியேறியவர் வீடு திரும்பாத நிலையில் இன்று அப்பிரதேசத்தில் உள்ள வயல் பிரதேசத்தில் மரமொன்றில் தனக்குத் தானே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதிமன்ற நீதிவான் வி.விணோபா இந்திரன் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.