மட்டக்களப்பு மாவட்டம் கல்குடாத் தொகுதியில் மீராவோடை, ஓட்டமாவடி, வாழைச்சேனை என்ற முஸ்லிம் கிராமங்களும் அதே பெயருடனான தமிழ்க் கிராமங்களும் பல்லாண்டுகள் வாழ்ந்து வந்தன என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
விடுதலையின் பெயரால் நிகழ்ந்த எத்தனையோ வேண்டத்தகாத சங்கதிகளில் தமிழ் முஸ்லிம் உறவும் பாழ்பட்டுப் போனது. எந்தவொரு தமிழ் இயக்கத்தாலும் குட்டுப்படாத முஸ்லிம்களைக் காண்பதரிதாகப் போனது.
இவற்றையெல்லாம் வரலாற்று ரீதியாக சொல்லிக் கொள்வதற்கான இடம் இதுவல்ல என்பதினால் ஒரு குறிப்பை மட்டும் இங்கே தமிழ் முஸ்லிம் மக்களிடம் முன் வைக்கிறேன்.
1950களின் ஆரம்பம். மீராவோடை தமிழ்ப் பகுதியைச் சேர்ந்த அண்ணாவி, முருகன், மார்த்தாண்டன், வேலன் என்போரும் மீராவோடை முஸ்லிம் பகுதியைச் சேர்ந்த எனது தகப்பனார், வாப்பிச்சி, பக்கீர் முகைதீன் (ஓடக்கரை) இவர்கள் அனைவரும் அதிகாலை வேளையில் தங்களுடைய தொழிலுக்காக கல்குடா கரை வலைக்கு கால்நடையாகப் போவார்கள். மீராவோடை கறுவாக்கேணி வீதியால் சென்று பெரிய பங்கில் இறங்கி, கைகாட்டி மரத்தைக் கடந்து கல்குடா ஸ்டேஷனால் திரும்பி கடற்கரையை அடைவார்கள். காலை 10 மணியளவில் கரை வலை தட்டியதும் மீன்கள் நிரம்பிய இரண்டு கூடைகளும் தோளில் நின்று கூத்துப்போட, குருத்து மணலில் அவர்கள் ஓடியோடி நடந்து வரும் காட்சி இன்னும் மனதில் அப்பிக் கிடக்கிறது.
இப்பொழுது கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு முன்னாலுள்ள காணிகளில் மீராவோடை தமிழ் முஸ்லிம் மீனவர்கள் குடியேறியிருந்தார்கள். எங்களுக்கும் ஒரு துண்டுப்பூமி வீதியோரமாக இருந்தது. சின்னகுடிலும் கொத்து வேலியும். பாடசாலை விட்டு வந்ததும், எங்கள் தகப்பன்மாருக்கு பகற்சாப்பாட்டை எடுத்துக் கொண்டு கறுவாக்கேணியிலிருந்த அந்தக் குடிலுக்குள் காத்திருப்போம்.
பகல் 1 மணியளவில் கரை வலையிலிருந்து தகப்பன்மார் கரையேறுவார்கள். இந்தக் காலகட்டத்தில் வாழைச்சேனையில் மங்களராம விகாரை கட்டப்படுகிறது. இது இப்படியிருக்க, ஓட்டமாவடியின் பிரதான சாலையை அண்டியும் புகையிரத வீதியைக் கடந்த ஆற்றங்கரை ஓரமாகவும் தமிழர்கள் குடியேறியிருந்தார்கள்.
தாழ்த்தப்பட்ட தமிழர்கள் என்பதைக் கவனத்திற் கொள்க. இப்பொழுதெல்லாம் அவர்களை நாங்கள் தலித்கள் என்று அழைக்கிறோம். வாழைச்சேனை, ஓட்டமாவடி, மீராவோடைப் பகுதிகளில் அந்த நாட்களில் வாளிக் கக்கூசி புழக்கத்திலிருந்தது. இவற்றைத் துப்புரவு செய்யும் தொழிலாளிகளும் சலவைத் தொழிலாளிகளுமே இந்த இடங்களில் முதன் முதலில் குடியேறினர்.
இவர்களைத் தொடர்ந்து இந்தக் கால கட்டத்தில் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள் இந்த நாட்டின் கைத்தொழில் அமைச்சராகப் பதவி வகிக்கிறார். ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட எத்தனையோ தொழிற்சாலைகளில் வாழைச்சேனை காகிதாலையும் ஒன்று. யாழ்ப்பாணத்திலிருந்து தொழிலாளர்களாகவும் அதிகாரிகளாகவும் உத்தியோகம் பெற்று இங்கு வருகிறார்கள்.
இவர்களில் சிற்றூழியர்கள் பலரும் நான் மேலே சொன்ன ஓட்டமாவடியின் புகையிரத நிலையத்திற்குச் சொந்தமான ரிசர்வேஷன் காணியில் ஆற்றங்கரை ஓரமாகவும் குடியேறுகிறார்கள். என்னுடைய ஊகம், இந்த மக்களும் யாழ்ப்பாணத்திலிருந்த தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்குமோ நானறியேன். இதைப் படிக்கும் பாக்கியம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஜெயானந்த மூர்த்தி அவர்களுக்குக் கிட்டுமானால் இந்த ரிஷி மூலத்தை அவர் விடுவிக்கலாம். ஏனெனில், அவ்வாறு தொழில் பெற்று வந்தவர்களில் அவருடைய தகப்பனாரும் ஒருவர். அவரும் இந்த இடத்திலேயே குடியமர்ந்தார்.
ஜெயானந்த மூர்த்தியின் மூத்த அண்ணன் தியாக மூர்த்தியும் அவரது அக்கா சுகிர்தராணியும் என் கூட ஓட்டமாவடி மகா வித்தியாலயத்தில் படித்தவர்கள். ஐம்பதுகளின் மத்தியில், பிறைந்துறைச்சேனையில் மங்களராம விகாரை கட்டப்படுகிறது.
1960களின் ஆரம்பத்தில் கோறளைப்பற்று டி.ஆர்.ஓவாக க.சண்முகலிங்கம் அவர்கள் கடமை புரிகிறார்கள். விகாரையைச் சுற்றி பெரும்பான்மையின மக்களை குடியேற்றும் நடவடிக்கை பிரதம மந்திரி அவர்களின் காரியாலயத்தினூடாக முடுக்கி விடப்பட்ட போது, சண்முகலிங்கம் ஐயா அவர்கள், எங்கள் பகுதி முஸ்லிம் பிரமுகர்களை அழைத்து, இந்த விடயத்தை முன் வைக்கிறார்கள். உடனடியாகவே எமது பகுதி மக்களுக்கு ஒரு வேண்டுகோளையும் முன் வைத்தார்கள். “இப்பொழுது ஓட்டமாவடியில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தில் அவர்களுடைய குடிப்பரம்பல்களுக்கு போதிய நிலம் இல்லாமல் போகும்.
இதனால், மீராவோடையிலிருந்து கறுவாக்கேணியில் காணி பிடித்துள்ள முஸ்லிம்கள் கறுவாக்கேணிக் கிராமத்தை தமிழர்களுக்கு வழங்கி விட்டு, முஸ்லிம் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பிறைந்துறைச்சேனையில் குடியேறுங்கள்” என்று பணித்தார்கள். அந்த வேண்டுகோளை அனைவரும் ஏற்று நடைமுறைப்படுத்தினர்.
பிறைந்துறைச்சேனையில் பெரும்பான்மையின மக்கள் குடியேறுவது சாதுரியமாக தடுக்கப்பட்டது. அந்தக் காரியத்தைச் செய்த திரு சண்முகலிங்கம் ஐயா என்றும் இப்பகுதி மக்களின் சங்கைக்குரியவராகிறார். பின்னர், படிப்படியாக ஓட்டமாவடியில் வாழ்ந்த தமிழர்கள் தங்கள் காணிகளை நல்ல விலைக்கு முஸ்லிம்களுக்கு விற்பனை செய்து விட்டு கறுவாக்கேணியில் குடிபெயர்ந்தனர். இதுவே உண்மை.
ஓட்டமாவடியில் வாழ்ந்த தமிழ் மக்களை முஸ்லிம்கள் ஒரு போதும் விரட்டியடிக்கவில்லை. அவர்கள் வாழ்ந்த நிலங்களை அபகரிக்கவுமில்லை. விடுதலைப் போராட்டம் தொடங்கிய 1978 இலிருந்து மெல்ல மெல்ல கசப்புகள் உருவாகத் தொடங்கின. எல்லாத் தமிழ் இயக்கங்களும் முஸ்லிம்களையும் நெருக்கத் தொடங்கினார்கள். 1985இல் கிழக்கில் இடம்பெற்ற தமிழ்-முஸ்லிம் இனச்சங்காரம் இந்தக் கசப்பை உச்சத்திற்குக் கொண்டு சென்றது. எல்லாத் தரப்பினரதும் உடமைகளும் உயிர்களும் அழிக்கப்பட்டன. இதில் முஸ்லிம்கள் நல்லவர்கள், தமிழர்கள் துரோகிகள் என்ற பேச்சுக்கு இடமில்லாமல் அவரவர் பங்குக்கு ஈவிரக்கமில்லாமல் அப்பாவித் தமிழர்களையும் முஸ்லிம்களையும் கொன்று குவித்தனர். இந்தச் சண்டை பெரும்பான்மையினருக்கு வாய்ப்பாக அமைந்தது.
ஒவ்வொரு முஸ்லிம் கிராமத்திலும் ஆங்காங்கே தாய் தகப்பன் சொல்லுக்குக் கட்டுப்படாத தறுதலை இளைஞர்கள் சிலர் அரச ஆயுததாரிகளுடன் இணைந்து செயல்பட்டனர். இவர்களைப் பொறுத்த வரையில் பெயர் மட்டுந்தான் ஒரேயொரு முஸ்லிம் அடையாளம். மற்றப்படி அவர்களுக்கும் இஸ்லாமிய நடைமுறைக்கும் எந்த சம்பந்தமுமில்லை. பெயரைக் கொண்டு மட்டும் ஒருவனை முஸ்லிமாக நாங்கள் ஏற்றுக் கொள்வதுமில்லை. இவ்வாறான இளைஞர்களைத்தான் இன்று வரையிலும் தமிழர் தரப்பு, முஸ்லிம் இயக்கங்கள் என்று பெயர் குறிப்பிடப்படாமல் விமர்சனம் செய்து வருகிறது.
தமிழர்களுக்கு அநீதி இழைத்ததாக ஆண்டு தோறும் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறது. தங்கள் தரப்பைச் சேர்ந்த விடுதலை இயக்கங்களும் தனி நபர்களும் முஸ்லிம்களுக்குச் செய்த அநீதிகளை இவர்கள் சொல்லுவதேயில்லை. நான் மீண்டும் ஓட்டமாவடிக்கு வருகிறேன். தமிழர்களுக்குரிய அனைத்துக் காணிகளும் விற்ற நிலையில், கோயில் காணி மட்டும் ஓட்டமாவடியில் மிஞ்சிக் கிடந்தது.
பரீதா மர ஆலை உரிமையாளர் அல்ஹாஜ் புஹாரி அவர்கள் அரை ஏக்கர் நிலத்தையும் 1989.07.20ம் திகதி ரூ.75,000.00க்கு வாங்கினார்கள். இதை அறிந்த விடுதலைப் புலிகள் அவரை இரவோடிரவாக கடத்தி கறுவாக்கேணியில் அடைத்து வைத்தார்கள். அன்று நள்ளிரவு ஒரு மணியளவில் கறுவாக்கேணியில் விடுதைல் புலிகளை நான் சந்தித்து, நடந்த விடயங்களை அவர்களுக்குத் தெளிவுபடுத்தி அவரை விடுவித்ததுமல்லாமல் கறுவாக்கேணி முத்துமாரியம்மன் ஆலய பரிபாலன சபையிடமிருந்து இவ்வாறான ஒரு கடிதத்தையும் பெற்றுக் கொண்டேன்.
1989.07.25ம் திகதி எமது கோயில் பரிபாலன சபையின் கூட்டம் தலைவர் எம்.மகாதேவன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஓட்டமாவடி ஸ்ரீசித்தி விநாயகர் ஆலயம் அமைந்திருந்த காணியை சதாசிவம் கனகசூரியம், கதிரவேல் சீனித்தம்பி, நல்லதம்பி சிவலிங்கம் ஆகியோரின் தந்தைமார் கையேற்றதன் பிரகாரம், மேற்கூறப்பட்டவர்களின் பிள்ளைகள் என்ற முறையில் அக்காணியை விற்று, இப்பணம் முழுவதையும் கறுவாக்கேணி ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய நற்பணிக்காக, மேற்படி ஆலய நிருவாகத்துடன் இணைந்து செலவு செய்வதற்கு எங்களுக்கும் இப்பரிபாலனத்திற்குட்பட்ட மக்களுக்கும் சம்மதம் என்பதை சா. ரவீந்திரன் பிரேரிக்க, ந.குமரய்யா என்பவர் ஆமோதித்தார். சபை ஏகமனதாக ஏற்றுக் கொண்டது.