திருகோணமலைக்கு இரண்டு நாள் விஜயமொன்றை எதிர்கட்சி தலைலர் சஜித் பிரமதாச மேற்கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் எண்ணக் கருவில் உருவான ''பிரபஞ்சம்'' திட்டத்தின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கான டிஜிட்டல் கற்றல் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில் திருகோணமலையில் நான்கு பாடசாலைகள் உள்வாங்கப்பட்டு அதனை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்விற்காக சஜித் பிரமதாச திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
திருகோணமலைக்கு விஜயம் செய்த சஜித் பிரேமதாச திருகோணமலை கோணேஸ்வரா ஆலயத்தில் இன்று இடம்பெற்ற விசேட பூஜை ஒன்றில் கலந்துகொண்டதுடன், திருகோணமலை சாம்பல்தீவு தமிழ் வித்தியாலயத்தில் "பிரபஞ்சம்" திட்டத்தினூடாக பாடசாலை மாணவர்களுக்கான டிஜிட்டல் கற்றல் உபகரணங்கள் மற்றும் பாடசாலையின் கணினி அறை என்பன உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து பாடசாலையின் அதிபர் வைரமுத்து கமலநாதனிடம் கையளித்திருந்தார்.
இதன்போது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர், நீங்கள் அனைவரும் ஊடகங்களின் ஊடாக அரசியல் பிரமுகர்கள் செய்யும் வேலைத்திட்டங்களை ஒவ்வொரு நாளும் பார்த்திருப்பீர்கள் 24 மணித்தியாலங்கள் 365 நாட்களும் பேசுவதற்கு சிறந்தவர்கள் அரசியல்வாதிகள் எவ்வளவுதான் பேசினாலும் நடைமுறைப்படுத்துவது என்பது குறுகிய வேலைத்திட்டங்களையே, ஆனால் நாம் "பிரபஞ்சம்" எனும் வேலைத்திட்டத்தின் கீழ் எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு அரச பாடசாலைகளை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத் திட்டத்தினை செவ்வனே செய்து வருகின்றோம்.
எம்மைப் போன்ற அரசியல்வாதிகளை தெரிவு செய்வது தேர்தல் ஒன்றின் மூலம் அது ஒரு வரம் மக்களின் ஆசீர்வாதம் இவ்வாறு தெரிவு செய்யப்படும் நாம் அவர்களுக்கு சேவை செய்வதற்காக தற்காலிகமாக 5 அல்லது 6 வருடங்களுக்கு சேவை செய்ய காலக்கெடு தரப்பட்டுள்ளது.
அவர்கள் எதிர்பார்ப்பது சிறந்த ஒரு ஆட்சியாளர்களை அமைத்து நாட்டின் அபிவிருத்தி நாட்டின் சௌபாக்கியத்திணை கட்டியெழுப்புவது, ஆனால் எம்மால் காணக்கூடியதாக இருக்கிறது மக்களை ஏமாற்றி தேர்தலில் வென்ற ஆட்சியாளர்கள் தற்காலிக சேவையாளர்கள் என்பதை மறந்து ஒருவரினால் எழுதி வைத்ததை நடைமுறைப்படுத்துவது போன்று செயற்படுகின்றனர்.
இவ்வாறான செயற்பாட்டினால் நாட்டில் ஊழல்,கொலை,கொள்ளை நாட்டின் தேசிய சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துதல் மற்றும் தேசிய சொத்துக்களை தீய சக்திகள் ஊடாக இலாப நோக்குடன் வழங்குதல் என்பன நாட்டில் தலைதூக்கி செயற்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
சுருக்கமாக சொல்லப்போனால் தற்போது நடைபெறும் ஆட்சி ஒரு அதள பாதாளத்தினை நோக்கி இருளில் சென்றுகொண்டிருக்கிறது எனவே எமது ஆட்சியில் இவ்வாறான நபர்களுக்கு இடம் இல்லையெனவும் அவ்வாறான ஊழல் அரசியல் வாதிகளுக்கு பதிவுகளை வழங்கி பாதுகாக்கவில்லை எனவும் இனியும் அவ்வாறு இடமளிக்க மாட்டோம் எனவும் உறுதியளிக்கின்றோம் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
எனது தந்தை காலம்சென்ற ரணசிங்க பிரேமதாச அவர்களினால் கொண்டுவரப்பட்ட இலவச சீருடை இலவச உணவு என்பன இன்றுவரை அமல்படுத்தப்பட்டு வருகின்றது அவ்வாறு நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் எனவும் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு டிஜிட்டல் மயப்படுத்தப்பட பணம் உங்களிடம் இருக்குமா என சந்தேகம் வரலாம் ஆம் எங்களிடம் பணம் இருக்கு ஊழல் அற்ற அரசாங்கத்தினை உருவாக்கினால் முடியும்.
ஊழல் அற்ற அரச தலைவர் ஒருவரை உருவாக்க மக்கள் தயாராக வேண்டுமெனவும் ஐக்கிய மக்கள் சக்தி அதற்கு தயாராக உள்ளதாகவும் இன்றைய தினம் கையளிக்கப்பட்ட டிஜிட்டல் உபகாரணத்தினை சரியான முறையில் பயன்படுத்தி இப்பாடசாலையில் நற்பண்பு, நாகரிகங்கள் கொண்ட ஊழல் அற்ற சமுதாயமாக உருவாக வாழ்த்துக்களை தெரிவிப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும் இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், புத்திக பத்திரன, கிழக்கு மாகாண முன்னாள் மாகாணசபை உறுப்பினர் வைத்தியர் அருண, பிரதேச சபை உப தவிசாளர் முகம்மட் நௌபர்,பிரதேச சபை உறுப்பினர் வெள்ளைத்தம்பி சுரேஷ் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.