‘கறுப்பு ஜனவரி’ தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டி போராட்டம்

இலங்கையில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, கடத்தப்பட்டுக் காணாமல்ஆக்கப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றமைக்கு எதிராகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ‘கறுப்பு ஜனவரி’ தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மெழுகுதிரி ஏந்தி தமது கோரிக்கையினை முன்வைத்துள்ளதுடன் துண்டுப்பிரசுரங்களும் விநியோகம் செய்யும் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகரில் நேற்று (30)மாலை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் உயிர்நீத்த ஊடகவியலாளர் நினைவுத் தூபியருகே இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அனைவரும் கைகளில் மெழுகுவர்த்தியை ஒளிரச்செய்து ஊடகவியலாளர்களின் நியாயமான கோரிக்கையினை கோரி நின்றதுடன் துண்டுப்பிரசுரங்களையும் விநியோகம் செய்யும் போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு.ஊடக அமையம், அம்பாறை மாவட்ட ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தொழில்சார் ஊடகவியலாளர் சங்கம்,கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்வில் 
ஊடகவியலாளர்கள், மதத்தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

“படுகொலை செய்யப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட, தாக்கப்பட்ட மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை நிலைநாட்டுங்கள்' என்பதே இவ்வருடத்திற்கான கறுப்பு ஜனவரியின் தொனிப்பொருளாக கொண்டு இன்றைய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பின்வரும் கோரிக்கை அடங்கிய துண்டுப்பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டன. இத்துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக தங்களது உயிர்களைத் தியாகம் செய்த ஊடகவியலாளர்களை நினைவு கூறும் ‘கறுப்பு ஜனவரி’ மாதத்தில் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் முன்வைக்கின்றோம்.

அத்துடன் இலங்கையின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக தங்களது உயிர்களைப் பணயம் வைத்துச் செய்யப்படும் ஜனநாயகத்தின் பாதுகாவலர்களான ஊடகவியலாளர்களைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முன் வருமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் அனைவரும் உண்மைகளை வெளிக்கொண்டு வந்து இலங்கையின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முயற்சி செய்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே படுகொலை செய்யப்பட்டனர்.

ஆனால் இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட எந்த ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கும் இது வரை நீதியைப் பெற்றுக் கொடுக்க யாராலும் முடியாது போயுள்ளது.

மாறி மாறி ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கங்களினாலும் அவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. ஆனால் ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்தவர்கள், கடத்தியவர்கள், அச்சுறுத்தல் விடுத்தவர்கள், ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் எனக் குற்றவாளிகள் அனைவரும் இன்றும் சுதந்திரமாக இந்த நாட்டில் நடமாடி வருகின்றனர்.

இலங்கையில் இன்றுவரை ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகப் பல ஊடகவியலாளர்கள் தங்களது உயிர்களைப் பணயம் வைத்து உண்மைகளை வெளிக்கொண்டு வந்த வண்ணம் உள்ளனர்.

அவ்வாறு உண்மைகளை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது தொடர்ந்தும் உயிர் அச்சுறுத்தல்கள், கண்காணிப்பு நடவடிக்கைகள், ஊடகவியலாளர்களின் குடும்பங்கள் மீதான அழுத்தங்கள், பொய் வழக்குகள், புலனாய்வுத் துறையின் கண்காணிப்புகள், முன்னாள் ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தல்கள் என பல்வேறு வகைகளில் ஊடகத்துறை மீதான அழுத்தங்கள் அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டே செல்கிறது.

இலங்கையில் ஊடகத்துறை மீதான படுகொலைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகளின் காலத்தில் மிகச் சுதந்திரமாக மேற்கொள்ளப்பட்டு அதற்குக் காரணமான குற்றவாளிகள் இன்று வரை கைது செய்யப்படாத நிலை தொடர்கிறது.

இலங்கையில் இதுவரை வரை சுமார் 43 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் 35 தமிழ் ஊடகவியலாளர்களும், 05 சிங்கள ஊடகவியலாளர்களும், 03 முஸ்லீம் ஊடகவியலாளர்களும் அடங்குகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் 01 ஊடகவியலாளரும், ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் 02 ஊடகவியலாளரும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் 13 ஊடகவியலாளர்களும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் 26 ஊடகவியலாளர்களும் என 43 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட உட்பட சில ஊடகவியலாளர்கள் காணாமல் போயுள்ளனர். பல ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

எனவே தொடர்ந்தும் இந்த நாட்டில் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாகச் செயல்பட வேண்டுமாக இருந்தால் ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்த, காணாமல் ஆக்கிய ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது வழக்கு தாக்கல் செய்து தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும்.

அவ்வாறு செய்தால் மாத்திரமே ஊடகத்துறை மீது கைவைத்தால் தண்டனைக் கிடைக்கும் என்ற பயம் குற்றவாளிகளுக்கு ஏற்படும். ஆனால் இலங்கையில் ஊடகத்துறை மீது கைவைத்தால் விசாரணைகளோ, தண்டனையோ இல்லை என்ற நிலையில் தொடர்ந்தும் குற்றவாளிகள் சுதந்திரமாகச் செயற்பட்டு வருகின்றனர்.

எனவே ஊடகத்துறை மீதான படுகொலைகள் மற்றும் காணாமல் போன சம்பவங்கள் உயிர் அச்சுறுத்தல்களுக்குச் சர்வதேச நீதி விசாரணை பொறிமுறை ஒன்றைக் கோரவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

இலங்கையின் உள்ள நீதிப் பொறிமுறை ஊடாக படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைக்காத நிலையில் எதிர்வரும் காலங்களில் சர்வதேச நீதி பொறிமுறை ஒன்றின் ஊடாக நீதி விசாரணை கோர உள்ளோம்.

எனவே இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட, தாக்குதல்களுக்கு உள்ளான, உயிர் அச்சுறுத்தல்களுக்கு உள்ளான, ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்களுக்கு நீதி கிடைப்பதற்கும், நீதி விசாரணைகளை மேற்கொண்டு ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இலங்கையில் ஜனநாயகத்தைப் பாதுகாக்கச் செயற்படும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வருமாறு அழைப்பு விடுக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

#B
புதியது பழையவை