மட்டக்களப்பு மாவட்டத்தில் 400 வருடங்கள் பழமை வாய்ந்த மட்டக்களப்பு கோட்டையினை அவுஸ்திரேலியாவின் நிதியுதவியுடன் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் ஆராயும் வகையிலேயே இலங்கைக்கான அவுஸ்திரேலியா நாட்டின் தூதுவர் டேவிட் கொலின் மட்டக்களப்பிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் வரவேற்றதை தொடர்ந்து குறித்த கோட்டையின் புனரமைப்பு பணிகள் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில் ஆராயப்பட்டது.
இதன்போது 2019ம் ஆண்டு தொடக்கம் முன்னெடுக்கப்பட்டுவரும் கோட்டை புனரமைப்பு பணிகள் பூர்த்தியடைந்ததும் குறித்த கோட்டையினை சுற்றுலாத்தளமாக மாற்றும் வகையிலான செயற்பாடுகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
டச்சுக் கோட்டை கட்டுவதற்கான ஆரம்ப பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 400 ஆண்டு நிறைவினை முன்னிட்டு, திறன் உள்ளடங்கிய அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்ளும் S4IG நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட விசேட நூல் மற்றும் மட்டக்களப்பு டச்சுக் கோட்டையின் அபிவிருத்தி எனும் நூலும் அவுஸ்திரேலிய உயரிஸ்தானிகர் டேவிட் ஹெலியிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.
இச்சந்திப்பின்போது மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந் உள்ளிட்ட மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், S4IG நிறுவனத்தின் முகாமையாளர் எஸ். மரீனா, S4IG நிறுவனத்தின் பிரதி குளுத் தலைவர் கமலநாதன் ஜெயதாஸ் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் பலர் பிரசன்னமாயிருந்தனர்.
இதன்போது நினைவுப்பரிசுகள் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.