மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில் மின்சார நெருக்கடிக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மின்விநியோகத் தடை தொடர்பில் நாட்டில் தற்போது காணப்படும் நிலைமை குறித்து மின்சக்தி மற்றும் வலுசக்தி துறைசார் பிரதானிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் நிலக்கரி மற்றும் புதைபடிவ எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் போது காணப்படும் பல்வேறு சிக்கல்கள் காரணமாக இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், நாட்டில் கையிருப்பிலுள்ள நிலக்கரியின் மூலம் மின்சார நெருக்கடிக்கு இடமளிக்காமல் முகாமைத்துவம் செய்ய முடியும் எனவும் அதிகாரிகள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், தற்போது காணப்படும் நிலைமையை சமாளித்து மக்களின் அன்றாட வாழ்க்கையை முன்கொண்டு செல்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர்களான காமினி லொக்குகே, உதய கம்மன்பில மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
