நாட்டில் நாளாந்தம் பதிவு செய்யப்பட்டுள்ள கொரோனா மரணங்களில் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளதாக சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பாக இருப்பதாக நினைத்து கொண்டு செயற்படுபவர்களே கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகளவு பாதிக்கப்படுவதாக வைத்தியர் சுகாதார பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்படி, கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கான நடவடிகைகளை முன்னெடுக்குமாறு அவர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
உயிரிழப்பவர்களில் பெரும்பாளானவர்கள் முதியவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் எனவும், தொற்றின் தாக்கத்தை குறைப்பதற்கு பூஸ்டர் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுமாறும் வைத்தியர் சுகாதார பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, தற்போதைய நிலையில், நாட்டில் ஒக்ஸிஜன் தேவை மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான படுக்கைகள் போதுமான அளவில் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், நாட்டில் 70 வீதத்திற்கும் அதிகளவான நபர்கள் முதலாவது தடுப்பூசியினை பெற்றுக்கொண்டுள்ள நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது தடுப்பூசிகளை விரைவில் பெற்றுக்கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அறிகுறியற்ற நபர்கள் பரிசோதனைக்குட்படுத்தப்படும் நிலையில், அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படுமெனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
