ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை தோற்கடித்தது ரஷ்யா

யுக்ரேன் மீதான படையெடுப்பைக் கண்டிக்கும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தினால் ரஷ்யா தோற்கடித்துள்ளது.  

அத்துடன், அமெரிக்காவினால் நேற்றைய தினம் கொண்டுவரப்பட்ட இந்த அவசர தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் சீனா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கலந்துகொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அத்துடன், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஏனைய 11 உறுப்பு நாடுகளும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.  

இந்த நிலையில், குறித்த தீர்மானத்தை 193 நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும், ரஷ்யாவினால் இவ்வாறான தீர்மானங்களை தோற்கடிக்க முடியுமே தவிர,தமது குரல்களைத் தோற்கடிக்க முடியாது என ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க பிரதிநிதி தெரிவித்துள்ளார். 

அத்துடன், ரஷ்யா தனக்கு காணப்படும் பொறுப்புக் கூறலைத் தட்டிக்கழித்து செயற்படமுடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.  

இதேவேளை, தமது நாட்டின் தலைநகரை ஒரே இரவில் முழுமையாக அழிப்பதற்கு ரஷ்யா எதிர்பார்த்துள்ளதாக யுக்ரேன் ஜனாதிபதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன், நாட்டின் பல நகரங்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும், மிகக் கடினமான தருணங்களைக் கடக்க நேரிட்டுள்ளதாகவும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், நாட்டின் தலைநகரை விட்டுக் கொடுக்க முடியாது எனவும், தலைநகரம் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

இதேவேளை, யுக்ரேன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ள நிலையில் 48 மணி நேரத்திற்குள் யுக்ரேன் தலைநகரை ரஷ்யா முழுமையாகக் கைப்பற்றும் என எதிர்வு கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை