வடக்கு - கிழக்கு இளைஞர்கள் திட்டமிட்டு திசை திருப்பப்படுகின்றார்கள்

2009இற்கு பின்னர் வடக்கு, கிழக்கிலே இளைஞர்களை உரிமை, போராட்ட சிந்தனைகளில் இருந்து மாற்றுவதற்காகத் திட்டமிட்டு இளைஞர்களைத் திசை திருப்பும் கபடத்தனமான கைங்கரியத்தை அப்போது ஆட்சியிலிருந்த அரசு மேற்கொண்டது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - கொக்குவில் பகலவன் விளையாட்டுக் கழக மைதான பெயர்ப்பலகைக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு நேற்று இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், கட்சியின் உபதலைவர் இந்திரகுமார் பிரசன்னா, மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் க.ரகுநாதன் உள்ளிட்ட பகலவன் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
விளையாட்டுகள் மூலம் தான் எமது எதிர்கால சந்ததியை எதிர்கால இளைஞர்களைத் தப்பான வழியிலிருந்து ஒரு நல்ல வழிக்கு இட்டுச் செல்ல முடியும்.

ஏனெனில் எமது போராட்டம் முடிந்ததற்குப் பிறகு வடக்கு, கிழக்கிலே திட்டமிட்டு இளைஞர்களைத் திசை திருப்பும் கைங்கரியத்தை 2009இல் இருந்த 2015 வரை ஆட்சி செய்த மகிந்த அரசு செய்திருந்தது. தமிழர்களின் உரிமைகளைப் பெறுவதற்காக அகிம்சை, ஆயுத ரீதியான போராட்டங்கள் நடைபெற்றது.

1969ஆம் ஆண்டு டெலோவினால் தான் இந்த ஆயுதப் போராட்டத்திற்கான அத்திவாரம் இடப்பட்டது. 1983 ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தையொட்டி இந்த ஆயுதப் போராட்டம் வீறுகொண்டெழுந்தது.

2009 ஆம் ஆண்டு இந்த ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பிறகு எதிர்கால இளைஞர்களைப் போராட்ட சிந்தனைகளிலிருந்து மாற்றுவதற்காக சில கபடத்தனமான வேலைகள் வடக்கு, கிழக்கிலே நடைமுறைப்படுத்தப்பட்டன.

போதைப்பொருட்கள் வடக்கு, கிழக்கிலே தாராளமாக விற்கப்பட்ட ஒரு காலம் இருந்தது. அந்த நேரத்திலே அதனைத் தடுக்க வேண்டியவர்கள் கூட கண்டும் காணாமல் இருந்தார்கள்.

இளைஞர்கள் தங்கள் உரிமை சம்மந்தமாகவோ, போராட்டம் சம்மந்தமாகவோ சிந்திக்கக் கூடாது என்பதற்காக அவர்களைக் கெட்ட வழிகளில் தள்ளும் நிலை இருந்தது.
அந்த நிலை எங்களது எதிர் பிரச்சாரத்தின் மூலம் மாற்றப்பட்டு வருகின்றது. அதற்கீடாக விளையாட்டுத் துறைகளிலே நமது இளைஞர்களை நாங்கள் ஊக்கப்படுத்துவோமாக இருந்தால் அத்துறைக்கு ஊடக அவர்களின் எதிர்காலத்தை நல்வழிப்படுத்த முடியும். நாங்கள் எமது சந்ததிக்காக எதிர்காலத்தை நல்வழிப்படுத்தக் கூடிய சமுதாயத்தைத் தோற்றுவிக்க வேண்டும்.

இந்த நாட்டிலே பாதிக்கப்பட்ட, பல இழப்புகளைச் சந்தித்த சமூகம் நாங்கள் கல்வி உட்படப் பல துறைகளிலும் மேலோங்க வேண்டியவர்கள் நாங்கள்.
அதே நேரத்திலே விளையாட்டுத் துறையிலும் நாங்கள் மேலோங்குவோமாக இருந்தால் உடல் ரீதியாக மாத்திரமல்லாமல், உள ரீதியிலும் எமது சந்ததியை முன்னோக்கிக் கொண்டு செல்லக்கூடிய நிலை உருவாகும்'' இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
புதியது பழையவை