தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலை கொண்டிருந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் கிழக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து நேற்று (18) முற்பகல் 08.30 மணிக்கு தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அண்மையாகவுள்ள தென் அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக மையம் கொண்டுள்ளது.
அது தொடர்ந்தும் கிழக்கு- வடகிழக்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், நாளையளவில் (20) ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் தென்மேற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதி கடற்பரப்புகளில் (03S-11N, 88E-96E) மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
மழை நிலைமை:-
புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :-
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:-
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாகபொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்.

