இலங்கையில் சப்ரகமுவ, மேல், தென் மற்றும் மத்திய மாகாணங்களின் பல இடங்களில் இன்று பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.
அத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசும் என்பதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
