ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான சர்வகட்சி மாநாடு இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில் சர்வகட்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவ படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.
எனினும், சர்வகட்சி மாநாட்டிற்கு பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கு முன்னதாக அழைப்பு விடுக்கப்படவில்லை என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
எனினும் பின்னர் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் சர்வகட்சி மாநாட்டினை புறக்கணிப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.
அத்துடன், அமைச்சு பதவிகளிலிருந்து விலக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களான பிவித்துரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில மற்றும் முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்ச ஆகியோர் சர்வ கட்சி மாநாட்டினை புறக்கணித்துள்ளனர்.
அத்துடன் அமைச்சு பொறுப்பிலிருந்து விலகி செயற்படும் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் சர்வகட்சி மாநாட்டினை புறக்கணித்துள்ளார்.
அரசாங்கத்தில் அங்கம் மாற்றுக் கொள்கைகளுக்கான 10 கட்சிகளின் தலைவர்களில் திஸ்ஸ விதாரண அசங்க நவரத்ன, மற்றும் அத்துரலிய ரத்தன தேரர் ஆகியோர் மாத்திரமே சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்வுள்ளனர்.
அதே நேரம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உம் சர்வ கட்சி மாநாட்டினை புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் அங்கம் வகிக்கும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ இராதாகிருஷ்ணன் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியி;ன தலைவர் மனோ கணேசன் ஆகியோரும் சர்வகட்சி மாநாட்டினை புறக்கணித்துள்ளனர்.
அத்துடன், மக்கள் விடுதலை முன்னணியும் சர்வ கட்சி மாநாட்டில் பங்கேற்க போவதில்லை என தெரிவித்துள்ளதோடு,பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த மாநாடு கூட்டப்படவில்லை என அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வ கட்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு,ஏனைய சிறு மற்றும் சிறுபான்மை கட்சிகள் சர்வ கட்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சர்வக்கட்சி மாநாட்டி பங்கேற்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தரப்பு குறிப்பிட்டுள்ளது.
