பொதுமக்களின் போராட்டத்தினையும் அவர்களின் கோரிக்கையினையும் ஏற்றுக்கொண்டு ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலகவேண்டும் என்ற தீர்மானம் மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேசசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
போராட்டத்தின்போது விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரினால் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
மட்டக்களப்பு,போரதீவுப்பற்று பிரதேசசபையின் அமர்வு நேற்று (12) பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி தலைமையில் நடைபெற்றது.
" நாட்டில் தற்போது பொதுமக்கள் பாரிய நெருக்கடிகளையும் கஸ்டங்களையும் எதிர்நோக்கிவரும் நிலையில் இந்த நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலகி சிறந்த ஆட்சியொன்று ஏற்படுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையுடன் பொதுமக்களினால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை தாங்கள் ஆதரிப்பதுடன் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்றி ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகவேண்டும் என்ற தீர்மானத்தை முன்வைப்பதாக யோ.ரஜனி சபையில் தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் சு.விக்னேஸ்வரன், இந்த அரசாங்கத்தினை கடந்த காலத்தில் ஆதரித்ததற்காக தாங்கள் வெட்கப்படுவதாகவும் தமது கட்சி இந்த கட்சிக்கு வழங்கிய ஆதரவுகளை விலக்கியுள்ளதுடன் பிரதேசசபையின் தீர்மானத்திற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்தார்.
இந்த தீர்மானத்திற்கு பல உறுப்பினர்கள் ஆதரவு வழங்கி உரையாற்றியதுடன் தீர்மானத்திற்கு முழுமையான ஆதரவினையும் வழங்கியதன் காரணமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன்போது ஊடகவியலாளர்கள் மீது விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார்மேற்கொண்ட தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதுடன் அது தொடர்பான கண்டன தீர்மானத்தினையும் தவிசாளர் யோ.ரஜனி முன்வைத்ததுடன் உறுப்பினர்களின் ஏகமான ஆதரவுடன் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
போரதீவுப்பற்று பகுதியில் உள்ள திருப்பழுகாமம் பிரதேச வைத்தியசாலையின் செயற்பாடுகள் தொடர்பில் உறுப்பினர் சு.விக்னேஸ்வரன் விசேட உரையாற்றியதுடன் குறித்த வைத்தியசாலையினை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை பிரதேசசபை முன்னெடுக்கவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்தார்.
இது தொடர்பில் இங்கு உரையாற்றிய தவிசாளர் யோ.ரஜனி,சுகாதார வசதிகளைப்பெற்றுக்கொள்வதில் படுவான்கரை பிரதேசம் புறக்கணிக்கப்பட்டுவருவதாகவும் தற்போதைய எரிபொருள் நெருக்கடி காலத்தில் முறையான போக்குவரத்துகள் இல்லாத காரணத்தினால் உயிரிழப்புகளும் அதிகரித்துவருவதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக 1990 சேவை அம்பியுலன்ஸ் கூட பட்டிருப்பு தொகுதியிலேயே இல்லாத காரணத்தினால் திடீர் நோயினால் பாதிக்கப்படும் ஒருவரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லமுடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் போரதீவுப்பற்றுக்கு 1990 சேவை அம்பியுலன்ஸ் ஒன்றை பெற்றுத்தர நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை விடுத்தபோதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலைமையேயிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அண்மையில் திக்கோடை பகுதியில் பாம்பு தீண்டி காயமடைந்த ஒருவரை சரியான நேரத்திற்கு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல போக்குவரத்து இல்லாத காரணத்தினால் அவர் உயிரிழந்ததாகவும் தவிசாளர் இதன்போது தெரிவித்தார்.
இன்றைய அமர்வின்போது பல்வேறு தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டதுடன் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
