எதிர்வரும் 9ஆம் திகதி மீண்டும் பாராளுமன்றம் கூடவுள்ளது.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (03) காலை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை வெளியிட்டார்.
கொள்கை பிரகடனத்தை ஆற்றிய ஜனாதிபதி, பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன் அரசியல் சீர்திருத்தங்களையும் அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிகள் அடங்கிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களிடமும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை சமீபகால வரலாற்றில் இதுவரை சந்தித்திராத ஒரு முன்னோடியில்லாத நிலைமையை இலங்கை எதிர்கொண்டுள்ளதாகவும், எனவே அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பொதுவான இலக்கை நோக்கி செயற்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரியாசன உரையைத் தொடர்ந்து, பாராளுமன்றம் மீண்டும் இம்மாதம் 9ஆம் திகதி பிற்பகல் 1 மணிக்கு கூடும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
