பாராளுமன்றம் 20ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கம் தொடர்பில் பாராளுமன்றில் விவாதம் ஒன்றை கோரவுள்ளதாக, எதிர்கட்சி இன்று பாராளுமன்றில் தெரிவித்தது.

எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் லஷ்மன் கிரியெல்ல இதனை இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.

இதன்போது பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, தாம் இது தொடர்பில் இன்று மத்திய வங்கியின் ஆளுநருடன் பேசியதாக குறிப்பிட்டார்.  இந்த இணக்கத்தை சமர்ப்பிப்பதில் எவ்வித தடைகளும் இல்லை என்று தம்மிடம் குறிப்பிட்ட மத்திய வங்கியின் ஆளுநர், இதற்கு முன்னர் கூறப்படாத வரிகள் தொடர்பான உணர்திறன் விடயங்கள் இணக்கத்தில் அடங்கியிருப்பதால், இது தொடர்பில் இறுதி முடிவை எடுக்கவேண்டியது நிதியமைச்சராகும் என்று தெரிவித்ததாக சபாநாயகர் கூறினார்.

இதனையடுத்து கருத்துரைத்த எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹேஸா விதானகே, சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கத்தில் வரி உணர்திறன் விடயங்கள் இருக்குமாயின் அவற்றை தவிர்த்து, ஏனைய இணக்கங்களை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார்.

இதன்போது பதில் வழங்கிய சபாநாயகர், தாம் இது தொடர்பில் நிதியமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாக உறுதியளித்தார்.

இதேவேளை அண்மையில் கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளையின் இரங்கல் உரைக்காக இன்று அமர்வு கூட்டப்பட்டபோதிலும் தேசிய முக்கியத்துவம் கருதி, தேசிய சபையை அமைப்பதற்கான யோசனை தொடர்பிலான விவாதத்தை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று பிரதமர் தினேஸ் குணவர்த்தன கேட்டுக்கொண்டார்.

எனினும், தேசிய சபை தொடர்பான யோசனை இன்னும் பாராளுமன்ற ஒழுங்குபத்திரத்துக்கு வரவில்லை என்று சபாநாயகர் அறிவித்தமையை அடுத்து பாராளுமன்றம் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
புதியது பழையவை