தமிழ் மக்களுக்கான அர்ப்பணிப்பு என்ற விடயத்தில் முன்னாள் போராளிகளை விட உதாரணத்திற்கு எவரையும் குறிப்பிட முடியாது

தமிழ் மக்களுக்கான அர்ப்பணிப்பு என்ற விடயத்தில் முன்னாள் போராளிகளை விட உதாரணத்திற்கு எவரையும் குறிப்பிட முடியாது என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, 
தமிழ் மக்களுக்கான அர்ப்பணிப்பு என்ற விடயத்தில் முன்னாள் போராளிகளை விட உதாரணத்திற்கு எவரையும் குறிப்பிட முடியாது.

அவர்கள் இன்று ஜனநாயக வழியில் மக்களுக்காகப் போராட முன்வந்துள்ளார்கள்.
அவர்களின் அர்ப்பணிப்பை உணர்ந்து அவர்களுக்கான களத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது தமிழ் மக்களின் தலையாய கடமையாகும்.
மக்களின் ஆணையே ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துள்ள முன்னாள் போராளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராட முன்வந்த பல இயக்கங்கள் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து செயற்பட்டு வருகின்றன.

அந்த அடிப்படையிலே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட எமது முன்னாள் போராளிகளும் ஜனநாயக நீரோட்டத்தினூடாக அரசியல் களத்தில் நுழைந்துள்ளார்கள்.

ஆனால் யுத்தம் முடிவுற்று இத்தனை வருடங்களாகியும் எமது முன்னாள் போராளிகள் மீதான அடக்குமுறைகள், அச்சுறுத்தல்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.

தற்போது முன்னாள் போராளிகளாகிய நாம் தமிழ்த்தேசியப் பரப்பில் எமது மக்களுக்காக ஜனநாயக ரீதியில் போராட முன்வந்துள்ளோம்.

எமது போராளிகளுக்கான பாதுகாப்பு மக்கள் எமக்கு வழங்கும் ஆணையிலேயே தங்கியுள்ளது. தமிழ் மக்களுக்கான அர்ப்பணிப்பு என்ற விடயத்தில் முன்னாள் போராளிகளை விட உதாரணத்திற்கு எவரையும் குறிப்பிட முடியாது.

ஏனெனில் எமது மக்களின் விடுதலைக்காக தனது உயிரைத் துச்சமென நினைத்து தன் குடும்பம், இளமை எதுவுமே பாராது ஆயுதமேந்திப் போராட வந்தவர்கள்.

அவ்வாறானவர்களின் அர்ப்பணிப்பினாலேயே இத்தனை காலம் வடக்கு கிழக்கில் தமிழினம் நிலைத்திருக்க வழிவகுத்தது.

அப்படியானவர்கள் இன்று ஜனநாயக வழியில் மக்களுக்காகப் போராட முன்வந்துள்ளார்கள். அவர்களின் அர்ப்பணிப்பை உணர்ந்து அவர்களுக்கான களத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது தமிழ் மக்களின் தலையாய கடமையாகும்.
இன்று முன்னாள் போராளிகள் பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தங்கள் அரசியலை முன்னெடுத்து வருகின்றார்கள்.

பலதரப்பட்ட விசாரணைகள், கைதுகள் அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்றன. போராளிகள் ஜனநாயக ரீதியில் போராட்டத்தை முன்னெடுப்பதை முடக்க வேண்டும்.

போராளிகள் அரசியல் களத்தில் மக்களுக்காக அர்ப்பணிப்போடு செயற்படுவார்கள் அவற்றைத் தடுத்து அவர்களாகவே அரசியலில் இருந்து ஒதுங்கிவிடச் செய்ய வேண்டும் என்ற விடயங்களை மையப்படுத்தி திட்டமிட்ட செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

கடந்த 1987களில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாகப் பல ஆயுதம் தாங்கிய போராட்ட இயக்கங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து அரசியல் நீரோட்டத்தில் இணைந்தன.

ஆனால் தற்போது அந்த இயக்கங்களின் பிரதிநிதிகளுக்கு மக்களால் வழங்கப்படுகின்ற ஆணையால் அவ்வியக்கங்களின் உறுப்பினர்கள் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் அரசியலில் ஈடுபட முடிகின்றது.

அது போலவே எதிர்காலத்தில் அரசியல் களத்தில் எமது மக்கள் எமது முன்னாள் போராளிகளுக்கு வழங்கும் ஆணையே அவர்களை தமிழ் மக்களுக்கான சேவையைச் சுதந்திரமாகவும், எவ்வித அச்சுறுத்தல்கள் இல்லாமலும் மேற்கொள்ளும் நிலைமையை உருவாக்கும்.

எதிர்வரும் தேர்தல்களில் ஜனநாயகப் போராளிகள் கட்சியானது எமது தலைமையின் வழிநடத்தலில் உருவாக்கம் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்கவுள்ளதுடன் பல தேர்தல்களிலும் களம் காணவுள்ளது.

எனவே அதன்போது எமது போராளிகளைக் கருத்திற்கொண்டும், அவர்களின் அர்ப்பணிப்பை நினைவில் வைத்து மக்களுக்காகப் போராடிய போராளிகளின் பாதுகாப்பிற்கான தங்களின் ஆதரவை வழங்க வேண்டும்.

மக்களின் ஆணை ஒன்றே முன்னாள் போராளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்” என்று இதன்போது தெரிவித்தார்.
புதியது பழையவை