கல்முனை ஐஸ் வாடி பகுதியில் இடிந்து விழும் நிலையிலுள்ள நீர்த்தாங்கி - அச்சத்தில் மக்கள்

அம்பாறை மாவட்டம் கல்முனையில் யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தத்தினால் முற்றாக பாதிக்கப்பட்ட நீர்த்தாங்கியுடன் இணைந்த கட்டட சிதைவுகள் பொதுமக்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கல்முனை மாநகரசபைக்கு உட்பட்ட கல்முனை ஐஸ் வாடி கடற்கரை பகுதியில் உள்ள நீர்த்தாங்கி மற்றும் கட்டட சிதைவுகள் இவ்வாறு இடிந்து விழும் நிலையில் உள்ளதாக அப்பிரதேச மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் மருதமுனை, நற்பிட்டிமுனை, கல்முனை மற்றும் சாய்ந்தமருது பகுதி கடற்தொழிலாளர்களின் தேவையான ஐஸ்கட்டி தேவைகள் இவ்வாடி ஊடாகவே பூர்த்தி செய்யப்பட்டு வந்ததாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்த நிலையில் குறித்த பாரிய நீர்த்தாங்கியிலிருந்து எந்தவொரு நீர் விநியோகமும் மேற்கொள்ளப்படாத நிலையில் நீர்த்தாங்கி முழுமையாக பழுதடைந்துள்ளதுடன், ஐஸ் உற்பத்தி நிலையமும் செயலிழந்து காணப்படுகின்றது.

இந்த நிலையில் நீர்த்தாங்கியில் காணப்பட்ட பாரிய வெடிப்புகள் அப்பிரதேச மக்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள நிலையில் அவை பகுதியளவில் உடைந்து விழுந்து கொண்டிருப்பதாகவும், நீர்த்தாங்கியை அகற்ற உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நீர்த்தாங்கியில் சந்தேகத்திற்கிடமாக பல பொருட்கள் காணப்படுவதையும் அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் - கொந்தைப்பிட்டி கிராமத்தில் சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டு கைவிடப்பட்டிருந்த பாரிய நீர்த்தாங்கி ஒன்று கடந்த ஆண்டு தள்ளாடி 54ஆவது படைப்பிரிவு இராணுவத்தின் உதவியுடன் குண்டு வைத்து தகர்க்கப்பட்டிருந்தது.
புதியது பழையவை