கம்பஹா கொட்டுகொட பகுதியில் பல்வேறு கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றதாக கொட்டுகொட பகுதிக்கு பொறுப்பான காவல் நிலையத்தில் கடமையாற்றும் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்திப்பிரிவிற்கு தெரிவித்தார்.
கடந்த 20 ஆம் திகதி பெண் ஒருவர் செலுத்திய உந்துருளியின் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த நபர், வீதியோரமாக நடந்துக்கொண்டிருந்த பெண்ணின் தங்கமாலை மற்றும் கைப்பை ஆகியனவற்றை அபகரிக்க முயற்சித்துள்ளார்.
இந்நிலையில், கைப்பையை குறித்த பெண் மிகவும் பலமாக பற்றியிருந்தமையினால் கொள்ளையர்கள் அருகிலுள்ள கால்வாயில் விழுந்துள்ளனர்.
தனது வீட்டினை அண்மித்த பகுதியிலேயே நடந்துக்கொண்டிருந்தமையினால் தன்னை காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளார்.
கணவர் மற்றும் பெண்ணின் தந்தை சம்பவ இடத்திற்கு வருகை தந்ததும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர் கூரிய ஆயுதங்களினால் தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான இருவரும் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குறித்த பெண்ணின் கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் விசாரணைகளை ஆரம்பித்த காவல் துறையினர் இன்று அதிகாலை சம்பவ இடத்திற்கு விரைந்த போது, சந்தேக நபர் காவல் துறையினரை தாக்குவதற்கு முயற்சித்துள்ளார்.
இதன்போது காவல் துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் சந்தேக நபர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.