இலங்கை விவசாயிகளுக்கு அமெரிக்கா நிதியுதவி

நாட்டின் விவசாயிகளின் தேவைகளுக்காக 40 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்குவதாக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் (USAID) நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடியான நேரத்தில் அமெரிக்கா இலங்கைக்கு தொடர்ந்தும் தனது ஆதரவை வழங்கும் என்று தெரிவித்தார்.

நேற்றையதினம் (10) இலங்கை வந்தடைந்த அவர், ஜா எல பிரதேசத்திற்கு சென்று அங்குள்ள விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், இங்குள்ள விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்ததாகவும், எரிபொருள் நெருக்கடி, உரமின்மை காரணமாக விவசாயிகள் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதற்கமைய, இலங்கை விவசாயிகளின் தேவைகளுக்காக அமெரிக்க மக்களிடமிருந்து மேலதிகமாக 40 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்கவுள்ளதாகவும், இதன் மூலம் 1 மில்லியன் உள்ளூர் விவசாயிகள் உரம் மற்றும் அவர்களுக்கு அவசியமானவற்றை பெறுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.

இந்த புதிய நிதியானது, அடுத்த பயிர்ச்செய்கைப் பருவத்தில் விவசாயிகளுக்குத் தேவையான விவசாயத் தேவைகள் மற்றும் உரங்களை உரிய நேரத்தில் பெறுவதற்கும், அவர்களது குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு உதவும் வகையிலும் வழங்க எதிர்பார்க்கப்படுவதாக, சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் (USAID) நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்தார்.

நெருக்கடி உச்சக்கட்டத்தில் இருந்த வேளையில், இலங்கைக்கு நிதி உதவி வழங்கியதற்காக இந்தியாவைப் பாராட்டியுள்ள சமந்தா பவர், அமெரிக்கா இந்தியா மற்றும் இலங்கை மக்களின் அனைத்து நண்பர்களுடன் இணைந்து இலங்கைக்கு ஆதரவளிக்கவுள்ளதாக வலியுறுத்தினார்.

IMF திட்டம் குறித்தும் கருத்து தெரிவித்த அவர், IMF உடனான ஈடுபாடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறிப்பிடத்தக்கது என்றும், IMF திட்டத்தைப் பெறுவதற்கு அமெரிக்கா முயற்சி செய்வதாகவும், பூர்வாங்க ஒப்பந்த நிலையை எட்டியுள்ள இலங்கைக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்றும் கூறினார்.

எவ்வாறாயினும், நாட்டில் கடன் தொல்லைகள் கேள்விக்குறியாக அமைந்துள்ளதாகவும், அரசாங்கமும் இலங்கையர்களும் தங்களது பொருளாதாரத்தை உயர்த்த தேவையான கடனை எவ்வாறு பெறுவது என்பது ஒரு பிரச்சினையாகவே உள்ளது என்றும் அவர் கூறினார்.
புதியது பழையவை