மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்ய - அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளரை இடமாற்றம்செய்யாவிட்டால் எதிர்வரும் வாரத்தில் பிரதேச செயலகத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்தப்போவதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரனை மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் உபதவிசாளர் மே.வினோராஜ் தலைமையிலான பிரதேசசபை உறுப்பினர்கள் சென்று சந்தித்துள்ளனர்.

இதன்போது பிரதேசசபை உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மகஜர் ஒன்றும் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப்பிரிவில் உள்ள பெரும்பாலான மக்கள் பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையினை தம்மிடம் வழங்கியுள்ளதாகவும்,இதன்போது மாவட்ட அரசாங்க அதிபரிடம் உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதனடிப்படையில் மண்முனை தென் எருவில்பற்று பிரதேசசபையின் 54வது அமர்வில் மக்களின் கோரிக்கைகள் கொண்டுசெல்லப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான அறிக்கையும் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டதாக பிரதேசசபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்களின் கோரிக்கைகளை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளதாகவும் விரைவாக நடவடிக்கையெடுப்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவ்வாறு எடுக்காவிட்டால் எதிர்வரும் 15ஆம் திகதி சபை அமர்வினை தொடர்ந்து பிரதேசசபையின் முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடாத்தவேண்டிய நிலையேற்படும் என மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் உபதவிசாளர் மே.வினோராஜ் தெரிவித்துள்ளார்.


புதியது பழையவை