மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் சத்திரசிகிச்சை நிலையத்திற்கு தேவையான மேலதிக உதவிகளை வழங்குவதற்கு இந்தியா தயாராக இருப்பதாக இந்திய தூதுவர் கோபால் பக்லே தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கில் சுகாதார உட்கட்டமைப்பின் மேம்பாட்டுக்கு இந்தியாவின் உந்துசக்தி திட்டத்தின் இந்திய நன்கொடை உதவி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரண்டு மாடிகளை கொண்ட சத்திரசிகிச்சை நிலையம் கட்டப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இந்திய தூதுவர் கோபால் பக்லே குறித்த சத்திரசிகிச்சை நிலையத்தை நேற்று (01.10.2022) பார்வையிட சென்றிருந்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்த இந்திய தூதுவர் கோபால் பக்லேவை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் வரவேற்றுள்ளனர்.
அதனை தொடர்ந்து இந்திய அரசாங்கத்தின் 263 மில்லியன் ரூபா செலவில் சகல வசதிகளுடனும் அமைக்கப்படும் சத்திரசிகிச்சை நிலைய விடுதியையும் அவர் பார்வையிட்டுள்ளார்.
இந்த விஜயத்தின்போது குறித்த நிலையத்தினை பூர்த்தி செய்வதற்குரிய தேவைப்பாடுகள் குறித்து தூதுவர் அறிந்து கொண்டதுடன் அது தொடர்பான விளக்கங்களை வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி க.கலாரஞ்சனி வழங்கியுள்ளார்.