மட்டக்களப்பு மாநகர மேயர் சரவணபவன் தலைமையில் மட்டக்களப்பு மாநகர சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக வெபர் அடிகளாரின் திருவுருவச்சிலை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக நேற்றைய தினம் (4) மட்டக்களப்பு மாநகர பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, மாவட்ட அரசாங்க அதிபர் க. கருணாகரன், மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர், மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.குலேந்திரகுமார், மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க. சத்தியசீலன், யேசு சபையின் மேலாளர் அருட்தந்தை டி.சகாயநாதன் உள்ளிட்டோரின் பங்கு பற்றுதலுடன் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகையினால் திருவுருவச்சிலை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
1914 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி ஐக்கிய அமெரிக்காவின், லூசியானா மாநிலத்தின்,நியூ ஓர்லீன்ஸ் நகரில் குடும்பத்தின் இரண்டாம் குழந்தையாக பிறந்த அருட்தந்தை ஹரல்ட் ஜோண் வெபர் இயேசு சபையின் அழைப்பை ஏற்று 1947 ஆம் ஆண்டில் இலங்கை வந்து சேர்ந்தார்.
1947 ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரிக்கு பணி செய்த இவரின் கவனம் விளையாட்டு பயிற்சிக் கூடங்களிலும் விழுந்த நிலையில், கல்லோயா நீர்த்தேக்க நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த நிறுவனத்தாரின் உதவியுடன் சுமார் 9 ஏக்கர் நிலப்பரப்பை மைதானமாக மாற்றி மைதானத்தின் தரத்தை மேம்படுத்தி அர்ப்பணிப்பு மிக்க பணிகளை செய்து அந்த மைதானத்திற்கு வெபர்_ஸ்டேடியம் என பெயரிடப்பட்டது.
இந்நிலையில், இரண்டு தடவைகளில் தொண்டையில் ஏற்பட்ட புற்று நோய் காரணமாக மட்டக்களப்பு_மண்ணிலேயே_ 1998 ஆம் ஆண்டில், அவர் தன்னை இறைவனிடம் ஒப்படைத்துக்கொண்டார்.