யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின முதல் நாள் நினைவேந்தல்

மாவீரர் வாரம் இன்று(21) ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின முதல் நாள் நினைவேந்தல் நிகழ் இன்று காலை இடம்பெற்றது. இதன்போது பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. 

பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபிப் பகுதி பல்கலைக்கழக மாணவர்களால் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளதுடன், தூபியைச்சுற்றி சிவப்பு மஞ்சள் நிறத்திலான வர்ணக்கொடிகள் கட்டப்பட்டுள்ளன.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரைப் போராட்ட களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மன்னார் – பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்புரவுப் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன. மாவீரர் வார ஆரம்ப நாளான இன்று பண்டிவிரிச்சான் துயிலும் இல்லத்தில் துப்பரவுப் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன. துப்புரவுப் பணியில் மாவீரர்களின் உறவுகளுடன், பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனும் கலந்து கொண்டிருந்தார். 

இவ்வாரம் முழுவதும் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதுடன், நவம்பர் 27 அன்று மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.



புதியது பழையவை