வெளிநாடுகளுக்கு ஆட்கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பெண் ஒருவர், குற்றப்புலனாய்வு திணைக்கத்தில் சரணடைந்ததையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை அவர் கொழும்பு – கோட்டையிலுள்ள குற்றப்புலனாய்வு திணைக்கத்தில் சரணடைந்ததையடுத்து கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை டுபாய் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு மனித கடத்தலில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபரின் உள்ளூர் முகவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றுமுன்தினம் மாலை கைது செய்யப்பட்டு, கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கைப் பெண்களை மத்திய கிழக்கு நாடுகளான ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு சட்டவிரோதமான முறையில் அனுப்பும் செயற்பாட்டுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் நேற்றுமுன்தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து எதிர்வரும் நவம்பர் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.