வடமேல் மாகாணத்தில் பாடசாலைகளில் பயிலும் அதிகளவான மாணவிகள் ஐஸ் உட்பட பல்வேறு போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
மாகாணத்தில் உள்ள பல பிரதான பாடசாலைகளில் பயிலும் மாணவர்களில் அதிகளவானோர் இவ்வாறு போதைப் பொருளுக்கு அடிமையாகி இருப்பது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.
8 ஆம் தரத்திற்கும் மேல் படிக்கும் மாணவிகள் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வடமேல் மாகாணத்தில் பிரதான நகரங்களில் இருக்கும் பிரசித்தி பெற்ற பாடசாலைகளில் பயிலும் மாணவிகள் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளனர்.
தமது காதலர்கள் மற்றும் போதைப் பொருள் விற்பனையாளர்கள் ஊடாக இவர்களுக்கு போதைப் பொருள் கிடைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில காலத்திற்கு முன்னர் பாடசாலை மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த நாவிற்கு கீழே வைக்கப்படும் போதை பொருளான தூள் என்ற போதைப் பொருள் தற்போது மாணவிகள் மத்தியில் பரவியுள்ளது.
பெரும்பாலும் பாடசாலை நேரங்களில் கழிவறைகளுக்கு சென்று அவர்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் வார இறுதி நாட்களில் பிரதான நகரங்களில் நடத்தப்படும் தனியார் பகுதி நேர வகுப்புகளுக்கு வரும் மாணவிகள்,தமது காதலர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து போதைப் பொருளை பயன்படுத்துவதை பழக்கமாக்கிக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள குருணாகல் நகரில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றின் அதிபர், இது மிகவும் பாரதூரமான பிரச்சினை என்பதால், நிலைமையை கட்டுப்படுத்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இல்லை என்றால், நாட்டின் முழு பாடசாலை கட்டமைப்பு மற்றும் நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க உள்ள இளைய தலைமுறை போதைப் பொருளுக்கு அடிமையாகி அழிந்து போவதை தவிர்க்க முடியாது.
பாடசாலைகளில் காணப்படும் இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பு தரப்பினருடன் சம்பந்தப்பட்ட புலனாய்வுப்பிரிவினரை பயன்படுத்துவதற்கான காலம் வந்துள்ளது எனவும் அந்த பாடசாலை அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்த நிலைமையானது மிகவும் பாரதூரமான நிலைமை என்பதால், அது சம்பந்தமாக அரசாங்கத்தில் பொறுப்புக்கூற வேண்டிய பிரிவுகளுக்கு அறிவிக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக வடமேல் மாகாண கல்வியமைச்சின் செயலாளர் ரஜிதா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.