மட்டக்களப்பில் காணி ஊழல் மோசடி சம்பந்தமாக தமிழ் ஊடகவியலாளர்கள் தமது துறை சார்ந்த ஊடகங்களில் எழுத விடாமல் தவிர்ப்பதற்காக அவர்களுக்கு ஏறாவூர் செங்கலடி பிரதேசத்தில் 10 பேச் காணி வழங்கி அவர்களது வாயை அடைத்திருக்கிறார்கள்.
காணி மோசடி செய்த அதிகாரிகள் அதிலும் குறிப்பாக காணி விடயத்திற்கு பொறுப்பான பிரதிப் பணிப்பாளர் எஸ் விமல்ராஜ் என்பவர் மோசடி செய்திருக்கிறார் என்று அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், மற்றும் காணி வழங்கப்பட்ட ஒட்டுமொத்த தமிழ் ஊடகவியலாளர்களை கொச்சைப்படுத்தி அவர்களது சுய கௌரவத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும், பாராளுமன்ற உயரிய சபையில் பிள்ளையான் உரையாற்றி இருப்பது.
அவரது அரசியல் பிற்போக்கு சிந்தனையை காட்டுவது மட்டுமன்றி அவரது காலங்களில் இடம்பெற்ற காணிமோசடிகளை மூடி மறைப்பதற்காக தமிழ் ஊடகவியலாளர்களின் வாயை அடைக்க முனைவது போல் தெரிகிறது.
எனவே தமிழ் ஊடகவியலாளர்களின் வாயை அடைக்க முனைவது பிள்ளையானே தவிர அதிகாரிகள் அல்ல.
இவ்விடயம் உண்மையிலே கண்டிக்கத்தக்க ஒரு விடயம் என ஞாயிற்றுக்கிழமை(6)மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர்கள் பலர் தமது அதிருப்தியை வெளியீட்டுள்ளார்கள்.
தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் கருத்து தெரிவிக்கையில் ...
தற்போது இராஜாங்க அமைச்சராக இருக்கும் பிள்ளையான் முதலமைச்சராக இருந்த காலம் தொடக்கம் இன்று வரை கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் பல நூற்றுக்கணக்கான பூர்வீக காணிகள் அவரது காலத்திலேயே அதிகம் பறிபோயிருந்தமை அனைவரும் அறிந்திருப்பார்கள்.
இதுபற்றிய வியாக்கியானங்கள் தற்போதும் இடம்பெற்று வருகின்றன இந்நிலையில், அவருக்கு துதி பாட முடியாத நடுநிலை தமிழ் ஊடகவியலாளர்கள் மீது சேறு பூசும் விதத்தில் அவர் உரையாற்றுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.தமிழ் ஊடகவியலாளர்களின் வாயை அடைக்க பிள்ளையான் மாத்திரமல்ல அவரது தாத்தாவாலும் முடியாது. அதிகாரிகளாலும் முடியாது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
ஊடகவியலாளர்களுக்கு காணி வழங்கப்பட்ட விவகாரம் முறையாக ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் காணிக்கு பொறுப்பான உயர் அதிகாரிகளின் வழிநடத்தலின் அடிப்படையிலும் வழங்கப்பட்டது.
இது விடயமாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அவர்களும் ஊடகவியலாளர்களுக்கு அக் காணி வழங்கும் விடயத்தில் அக்கறை கொண்டிருந்தார். கொடுக்க வேண்டும் என்பதிலும் உரிய அமைச்சுக்கு பிரஸ்தாபித்திருந்தார்.
என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமில்லை.எனவே பிள்ளையானின் உரையின் மூலமாக காணி கிடைக்காத முஸ்லிம் சகோதர ஊடகவியலாளர்கள் சிலரின் காழ்ப்புணர்ச்சியும், பத்திரிகையில் வாயிலாக வெளிவந்த வண்ணம் உள்ளன.
முஸ்லிம் ஊடக சகோதரர்களுக்கு காணி வழங்காததற்கான நியாயமான காரணங்கள் பல்வேறு உள்ளன.அவர்களும் அவர்களது பகுதிகளில் உரிய காணியை அடையாளப்படுத்தி காணிக்குரிய கோரிக்கையை உரிய அதிகாரிகளுக்கு உரிய முறையில் விண்ணப்பித்திருந்தால் அவர்களுக்கும் காணி வழங்கப்பட்டு இருக்கலாம்.
அதற்காக மயிலம்பாவெளி காமாட்சி அம்மன் கோயிலுக்கு அருகாமையில் அவர்களையோ அல்லது மெத்தைப் பள்ளி வாயிலுக்கு அருகாமையில் எங்களுக்கோ காணி வழங்கி குடியமர்த்தக் கூடிய சந்தர்ப்பம் உள்ளதா என்பதை இதனை சிலாகித்து பேசுபவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தமிழ் ஊடகவியலாளர்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல.எந்த சலுகைகளுக்கும் அரசியல் மாற்றத்திற்கேற்ப சோரம் போனவர்களும் அல்ல. இந்தக் காணியைத் தவிர வேறு எந்த விதமான சலுகைகளும் பெறாதவர்கள் என்றால் அது தமிழ் ஊடகவியலாளர்களாகத்தான் இருக்க முடியும்.
இதனை இராஜாங்க அமைச்சரும் புரிந்து கொள்ள வேண்டும். வாய்க்கு வந்த மாதிரி பேச கொடுத்த நேரத்தில் எதையாவது பேசி விட வேண்டும் என்று பேசக்கூடாது.
"தமிழ் எல்லைப் பகுதிகளில் எல்லையை நிர்ணயம் செய்வோம்","நடுகைக் கற்கள் இட்டு நிலத்தை பாதுகாப்போம்", "எமது தமிழ் மக்களின் இருப்பைக் காப்பாற்றுவோம்" என்றெல்லாம் எமது மக்களுக்கு வாக்களித்து தமிழர்களுக்குள்ளேயே எதிர்ப்பு அரசியல் செய்து கொண்டு அரசியலுக்கு வந்தவர் இருப்பையும் காப்பாற்றவில்லை. நிலங்களுக்கு எல்லை நிர்ணயமும் செய்யவில்லை. எல்லா குழுக்களிலும் அவரும் ஒரு அங்கமாகவே இருப்பார். ஆனால் பெற்றதை விட எமது மக்கள் இழந்ததே அதிகம். எனவே ஊடகவியலாளர்களின் வாய்க்குள் அவர் கம்பை விட்டது மட்டுமன்றி ,அவரது காணி மோசடிகளை பலர் பேசும் படியாக களம் அமைத்துக் கொடுத்திருக்கிறாரே தவிர தமிழ் ஊடகவியலாளர்கள் இதைப் பற்றி அலட்டிக் கொள்ளப் போவதில்லை.