மட்டு. மாவட்டத்தில் விவசாயத்துக்கான அரச காணிகளை வனவளத்துறையிடமிருந்து விடுவிப்பது தொடர்பான விஷேட கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உற்பத்தி மற்றும் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்தத் தேவையான அரச காணிகளை வனவளத் துறையிடமிருந்து விடுவிப்பது தொடர்பிலான விசேட கூட்டம் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.


கடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட ‘மாவட்டத்தின் உற்பத்தி மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கென அடையாளம் காணப்பட்ட அரச காணிகளை வனவளத் துறையிடம் இருந்து விடுவித்தல்’ என்ற தீர்மானத்துக்கு அமைவாக கமத்தொழில் மற்றும் வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவின் பங்கேற்புடன் விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது நாடளாவிய ரீதியிலுள்ள அரச காணிகளை பயன்படுத்தி உற்பத்தி மற்றும் விவசாய நடவடிக்கைகளை அதிகரிப்பதன் அவசியம் தொடர்பிலும் 2019ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட வனவளத்துறை தொடர்பிலான வர்த்தமானியால் உற்பத்தி மற்றும் விவசாயத் துறையில் ஏற்பட்ட பின்னடைவுகள் தொடர்பிலும் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.

அதனடிப்படையில் எதிர்வரும் 3 வாரங்களுக்குள் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான களவிஜயத்தை முன்னெடுத்து மேற்குறித்த நோக்கங்களுக்கென அடையாளம் காணப்பட்ட காணிகளை வனவளத் துறையிடமிருந்து விடுவிப்பது என்ற தீர்மானமும் அமைச்சரினால் எட்டப்பட்டது.

இதன் மூலம் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மகிழடித்தீவுப் பகுதியில் சுமார் 380 ஏக்கருக்கும் அதிகமான இறால் வளர்ப்புத் திட்டங்கள், மாவட்டத்தின் பல பாகங்களிலும் செய்கை இடம்பெறாமல் காணப்படுகின்ற 1000 ஏக்கருக்கும் அதிகமான வயல் காணிகள், கோறளைப்பற்று வடக்கு, கோறளைப்பற்று தெற்கு ஆகிய பிரதேசசெயலகப் பிரிவுகளில் அமையவுள்ள மீன் மற்றும் இறால் வளர்ப்புத் திட்டங்கள் என பல விவசாய மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இதன்முலம் மாவட்டத்துக்கான வருமானத்தை அதிகரிக்க முடிவதுடன் பல தொழில் முயற்சிகளையும் இளம் சந்ததியினருக்கு உருவாக்கிக் கொடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை