மின்னல் தாக்கி ஒருவர் பலி- மூன்று பேர் காயம்

புத்தளம்– உடப்பு பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் நேற்று (14) மாலை உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.

உடப்பு ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த 28 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உடப்பு – பாரிபாடு கடற்கரையோரத்தில் கரைவலை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த நால்வர் மின்னல் தாக்குதலுக்கு உள்ளானதாக பொலிஸார் கூறினர்.

இதன்போது, மின்னல் தாக்குதலுக்கு உள்ளான குறித்த நால்வரையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக உடப்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதிலும், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் சடலம் உடப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த மூவரும் மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் உடப்பு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
புதியது பழையவை