புத்தளம் பள்ளம், வில்பத்த பிரதேசத்தை சேர்ந்த பிரபல பூசாரி ஒருவர் பாடசாலை மாணவியான சிறுமிக்கு மந்திரிக்கும் போர்வையில் வன்புணரவில் ஈடுபட்டதால், ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் பூசாரியை கடுமையாக தாக்கியுள்ளனர்.
படுகாயமடைந்த பூசாரி ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பள்ளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வில்பத்த பிரதேசத்தில் ஆலயம் ஒன்றை நடத்தி வரும் பிரபலமான பூசாரி ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆலயத்திற்கு அருகில் உள்ள பிரதேசத்தில் வசித்து வரும் 12 வயதான சிறுமியே வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
சிறுமி சுகவீனமுற்று இருந்த காரணத்தினால், தாய், சிறுமியை ஆலயத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது சிறுமிக்கு மந்திரிக்க வேண்டும் எனக்கூறி தாயை வெளியில் இருக்குமாறு கூறி விட்டு, சிறுமியை ஆலயத்திற்குள் அழைத்துச் சென்று மந்திரித்துள்ளார்.
இதன் பின்னர் சிறுமி மேலும் மந்திரத்தின் மூலம் சிகிச்சையளிக்க வேண்டும் எனவும் பாதுகாப்புக்காக யந்திரம் அணிவிக்க வேண்டும் என்று கூறி தாயையும் சிறுமியையும் அனுப்பி வைத்துள்ளார்.
சிறுமி வீட்டுக்கு சென்ற பின்னர், ஆலயத்தில் நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறியதை அடுத்து ஆத்திரமடைந்த தாயும் தந்தையும் ஆலயத்திற்கு சென்று பூசாரியை கடுமையாக தாக்கியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பள்ளம் காவல்துறையினர் பூசாரியை கைது செய்துள்ளதுடன், பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பாக பள்ளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.